Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Saturday, November 14, 2009

"..கடைசியில இப்படியாயிருச்சு. மன்னிச்சிருங்க சேது,"என்று பூங்கா இலக்கிய சபாவிலிருந்து கூறிய கடைசி வார்த்தைகள்தான் இவன் மனசில் நின்றது. வேகமாக தொலைபேசியை அணைத்து அதனிடம் மட்டும் காட்டமுடிந்த தன் கோவத்தைக்காட்டி இயலாமையை பூசிக்கொண்டான். தான் அடிக்கடி விரும்பிச்சாப்பிடும் மிளகாய் பஜ்ஜி கடை பக்கத்திலிருந்தும் இவன்யிருந்த பீச்சில் யாருமில்லாததைப் போலவே தெரிந்தது, உலகமே இவனை தனித்துவிட்டதுப்போல தெரிந்தது. வர வெள்ளி கல்வி அமைச்சர் வரதால அன்றே தன்னோடைய 'நசிந்தப் பூக்கள்' நூல வெளியிடலாம்னு யோசிச்சான் அதனால இலக்கிய சபா வழியா பதிப்பகத்திலையும் சொல்லி சம்மதம் வாங்கியாச்சு, அமைச்சருக்கும் தகவல் கொடுத்தாச்சு. அனால் கடைசி நேரத்தில் அந்த ப்ரிண்டர்காரனிடமிருந்து முதல் பிரதிகள் தயாராகவில்லை. காசு அதிகம் கேட்பானு வெள்ளிக்கிழமை அமைச்சர் விழாவில வெளிவரப்போகுதுனு சொல்லாம இருந்துவிட்டான், அதான் இவன் பண்ண ஒரே தப்பு. அமைச்சர் விழாவில வெளியிட்டா தன் பேரும் கொஞ்சம் பத்திரிக்கையில வரும் சில நூல் விமர்சனத்திலையும் அடிபடும் பதிப்பகத்துக்கும் தன் மேல ஒரு மதிப்புவரும் ஆனால் அத்தனையும் இப்ப மண்ணாப்போச்சேயென நொந்துகொண்டான்.எதற்கும் ஒருவாட்டி பதிப்பகத்துக்கும் போன் பண்ணி நிலைமைய உறுதி செஞ்சான். என்ன பயன் அங்கயும் ஒரே பதில் 'பஸ்ட் காப்பி ரெடியாகல'.



"சரி அதுகூட வேண்டாம் அந்த விழாவிலேயே எப்படியும் 200 காப்பிக்காவது ஆர்டர்வரும் அப்படி வந்துச்சுனா, புக்கு பேரு பரவும் எல்லா நூலகத்திலையும் போய்ச்சேரும் கொஞ்சமாவது மக்கள் மனசில நிக்கும். அதுல ஒருத்தராவது உங்க புக்க படிச்சேன் நல்லாயிருக்குனு சொன்னா என் பேனா தலைநிமிர்ந்திருக்கும். ஒருவேலை நம்ம புக்கோட ராசி அப்படியிருக்கும்மோ? சேச்ச!. ஒரு அரசியல பத்தியோ, சினிமா பத்தியோ எழுதியிருந்தா இப்படி கவலைபட தேவையில்லை எப்படியும் பாப்புலராகும் ஆனால் நான் எழுதியது ஒரு 'சென்சிபில்' சப்ஜெக்ட ஆச்சே! நான் சின்ன வயசிலயிருந்தே வேலைக்கு போனவன் அதனால் கிடச்ச வலியையும் அதற்கான வழியையும் சொல்ல நினைச்சு எழுதிய புத்தகம் தானே என் 'நசிந்தப் பூக்கள்'. இப்படி அடையாலமற்றுப்போச்சே. இனி இந்த மாதிரி விழா நடந்தாலும் என் புக்க வெளியிடுவாங்களா? இல்ல அமைச்சர் தான் சம்மதிப்பாரா? எல்லாம் கஷ்டம்தான்

இங்க சுண்டல் விற்கிற எத்தனையோ சிறுவர்கள் தங்கள் வாழ்க்கைக்கல்வியை துளைச்சுட்டு அஞ்சுக்கும் பத்துக்கும் அழையவேண்டியதாயிருக்கு. எனக்கு கிடச்ச ஆசரமம் மாதிரி இவங்களுக்கும் கிடைச்சா நல்லாயிருக்கும் ஆனால் இவங்க அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்க, கல்வியால வேலைகிடைக்காதுனு நம்புர கூட்டத்தில கல்வி எப்பவுமே சுண்டைக்காய்தான். அரசு, வேலைவாய்ப்பு தர கல்விய கொடுக்கும் காலம் வரை இது தொடரலாம். படிச்ச கல்விக்கும் பார்கிற வேலைக்கும் சம்மந்தமேயில்லாதபோது அவங்கள போல தினக்கூலிகள் தங்கள் வாரிசையும் தினக்கூலிகளாகவே வளர்க்கிறதுல நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இவங்களுக்கு பணவுதவி செய்யிறதெல்லாம் இலவசமா வர சலுகையப்போல பயனற்றுத்தான் போகும். அடிப்படையாகவே, அவர்கள் மனநிலை மாறவேண்டும் விழிப்புணர்வு பெறவேண்டும். குறைஞ்ச சம்பளம்தானேனு சின்ன வயசு பசங்கள வேலைக்கு வைக்கிறத வியாபாரிகள் நிறுத்தனும். இந்த தலை முறையோட சரி அடுத்த தலைமுறையாவது மற்ற குழந்தைகளைப்போல படிக்கவும், அதை வைத்து சிந்திக்கவும் பழகவேண்டும். என்னால ரெண்டு பேரு திருந்தினா நல்லாயிருக்குமுனுதானே நினைச்சு எழுதினேன் என் நசிந்தப் பூக்களை.

ஆனால் மக்கள்கிட்ட போய்ச்சேருமானு தான் திட்டம் போட்டு அமைச்சர் விழாவில அறிமுகப்படுத்த நினைச்சேன். என்னபண்ண விளம்பரமில்லாத சரக்கு விற்பனைக்குதவாதுதானே! அந்த புத்தகத்திலவுள்ள 139 பக்கமும் என் 39 வருடவாழ்க்கை எனக்குத்தந்த படிப்பு. அடுத்து இதை நானாக வெளியிட்டால் அவ்வளவாக போய்ச்சேராது அதுமட்டும் உறுதி. எல்லாத்துக்கும் காரணம் பாழப்போன ப்ரிண்டர்காரன்தான்... காச வீசியெருஞ்சிருந்தேன்னா இந்தப்பிரச்சனையே வந்திருக்காது"

இவ்வாறு தனக்கு தானாக இரண்டாவது மனிதன் போல பேசிக்கொண்ட நேரத்தில் பஜ்ஜிகடைக்காரர் இவனை கூப்பிட்டு இவன் உள்மனப்பேச்சை சிதைத்தார். "என்ன தம்பி கடலையே பார்த்துகிட்டுயிருக்கேங்க சூடா பஜ்ஜியிருக்கு தரட்டுமா?" என்றார். ஆத்திரப்படாமல் அமைதியாக தலையை வேண்டாம் என அசைத்தான் சேது. இப்போழுது இவனின் கோபம் முழுதும் அச்சகத்திடம் மட்டுமே. ஏமாற்றத்தின் உச்சாணிக்கொம்பில் இருந்துகொண்டு தன் கோபத்தால் வசைபாட அந்த ப்ரிண்டர்காரனுக்கு போன் போடுகிறான். மறுமுனையில் எடுத்தவர்
"ஹலோ"

"நான் சேது பேசுறேன்"

"சேதுவா, எந்த சேது?"

"பூங்கா இலக்கிய சபாலயிருந்து அச்சுக்கு கொடுத்த 'நசிந்தப் பூக்கள்' நூல் ஆசிரியர் பேசுறேன்"(கரத்த குரலில்)

"சார்! வணக்கம் சார், உங்க எழுத்த படிச்சேன் தரமா எழுதிருக்கேங்க அதை படிச்சதிலயிருந்து மனசு சரியில ஒரு குற்றவுணர்ச்சி, அதனால என்கிட்ட வேலைபார்த்தமூனு சின்னபசங்கள வேலைவிட்டு அனுப்பிட்டேன். எதோ சாதிச்சமாதிரியிருக்கு.. எதோ சொல்லவந்தேங்களே?"

"இல்ல, சும்மாதான் விசாரிக்கதான்"(மெல்லிய குரலில்)

"ஆளில்லாம வேலையெல்லாம் கிடந்துபோச்சு. ஒன்னும் அவசரமில்லைலே! இன்னைக்கு நைட்டு மச்சான் ஊர்லயிருந்து வரான் வந்தவுடனே உங்க காப்பி அச்சாக ஆரம்பிச்சுரும்."

அந்த பஜ்ஜிக்கடைய பார்த்து சேது "அண்ணே ரெண்டு பஜ்ஜி,கொத்தமல்லிச் சட்னி"

'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009'

5 மறுமொழிகள்:

ஸ்வர்ணரேக்கா said...

நச் மிஸ்ஸிங்தான்... ஆனாலும் கதை ரொம்ப நல்லா இருக்கு...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Anonymous said...

நல்லாயிருக்கு!

நீச்சல்காரன் said...

அனானி தங்கள் கருத்துக்கு நன்றி.

ஸ்வர்னரேக்கா,
வெளிப்படையான கருத்துக்கு நன்றி சகோதரி
"'நச்'னு ஒரு திடீர் திருப்பம் இருக்கணும்" என்றதால திடீர் திருப்பத்தில் மட்டும் கவனமாகி 'நச்' சிதறிவிட்டதோ!

அவனி அரவிந்தன் said...

கதையி்ன் கருத்து நச்சென்று இருக்கிறது. சமூக சீர்திருத்த வித்தாக இக்கதை அமையட்டும். வாழ்த்துக்கள் நீச்சல் :)

நீச்சல்காரன் said...

நன்றி அரவிந்தன் அவர்களே