Pages - Menu

Friday, July 15, 2016

மேப்பிள் தேசத்து மேகங்கள்

கனடா இலக்கியத் தோட்டத்தில் ஒரு விருது வாங்க வேண்டும் என்பது நூல் வெளியிட்ட ஒவ்வொரு எழுத்தாளனின் கனவாக இருக்கும். எஸ்.ரா, ஜெமோ போன்ற நெருங்கிய பிரபலங்கள் வாங்கும் போதும் அந்தக் கனவு இரட்டிப்பாகும். ஆனால் "அதற்கெல்லாம் நீ லாயக்கு இல்லை தொழிற்நுட்ப விருது தாரேன் அதையாவது ஒழுங்காகச் செய்" என்று சொல்லாமல் சொல்லி ஒரு அழைப்பு வந்தது. அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பித்து, பூமியின் மறுபுறம் டொரோண்டோ செல்வதென முடிவானது. சீக்கிரமாகச் செல்லும் விமானத்தைப் பிடித்து இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் எதிலும் கையெழுத்து இடவேண்டிய சூழல் இல்லாததால் மலிவான விமானத் திட்டம் ஒன்று போடப்பட்டது. முக்கியமாக ஜன்னல் சீட்டுடன், தேவையான காத்திருப்பு நேரம் இருக்கும்வகையில் அமைந்தது.அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து அபுதாபி செல்லும் விமானம் சரியான நேரத்தில் தயாராக இருந்தது. கடவுச் சீட்டு சோதனையில் அமர்ந்திருந்தவர் மதுரைக்காரர் என்பதால் சற்று அதிகநேரம் குலாவ நேர்ந்தது. விமான நிலையத்தின் மேற்கூரை விழும் முன்னே விரைவாகப் பயணச் சீட்டை(boarding pass) வாங்கிக் கொண்டு காத்திருப்புப் பகுதிக்குள் விஜயம் செய்யப்பட்டது. ஜெட் ஏர்வேஸில் விமான ஓட்டி பஞ்சதந்திர கமல் குரலில் தமிழில் வரவேற்று விளக்கிக் கொண்டிருந்தார். விமானத்திற்குள்ளே ஒரு முழுப் படத்தைப் பார்த்து முடிப்பதற்குள் அபுதாபியை அடைந்தது அந்த விமானம்.

அபுதாபியில் அப்படியே ஒரே பேருந்தில் அனைவரையும் ஏற்றிக் கடத்திக் கொண்டு விமான முனையத்தில் இறங்கிவிட்டனர். அங்கே சோதனையெல்லாம் முடித்துக் காத்திருந்த போது ஒரு இந்தியப் பயணியுடன் பேசிக்கொண்டே அந்தக் குளிரில் உயிர்வாழ வேண்டியிருந்தது. ஜெட் விமானத்தில் கொடுத்த ஒரு சிற்றுண்டியைப் பையில் போட்டு எடுத்து வந்ததால் அவ்வேளையில் சற்று பசியாற முடிந்தது. பிரசெல்ஸ் விமானம் பின்னர் டொரோண்டோ விமானம் என மீண்டும் பறந்து கனடாவில் இறக்கிவிட்டனர். ஒபாமாவை ஒத்த சாயலில் இருந்த ஒருவர் பக்கத்துச் சீட்டில் அமர்ந்து பேனா கடன் வாங்கினார் என்பதைக் கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு அங்கே காவலாளி கேள்விமேல் கேள்வி கேட்டு தனது அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ் இலக்கியத் தோட்டம் பற்றி கூறிய பின்னர் ஒருவழியாக வாழ்த்து சொல்லி அனுப்பினார். வைபை இணைப்பிற்குப் பகீரதபிரயத்தனம் செய்தாலும் யாரையும் அழைக்க முடியவில்லை. பஞ்சாபிய சகபயணியின் தொலைபேசி உதவியுடன் வாகனசாரதியுடன் பேசி உள்நாட்டு ஜோதியில் ஐக்கியக்கமாக முடிந்தது. எதேச்சையாக சாரதி பெயரும் சோதி என்ற சோதிநாதன்.

இருசக்கர வாகனங்களே இல்லாத அளவிற்குச் சாலைகளில் மகிழுந்துகள் நிரம்பி வழிந்தன. அங்கே சுங்கச் சாவடிகள் எல்லாம் கணினிமயம், வாகனத்தில் பொருத்தியுள்ள ஒரு மென்பொறி உதவியுடன் அந்த வாகனம் அச்சாலையைக் கடந்தது என்று கணித்துக் கொள்கிறார்கள். பல உள்ளூர் தமிழ் நாளிதழ்கள் விலையில்லாமலே கிடைக்கின்றன. நுகர்வோரே பெட்ரோலைப் போட்டுக் கொண்டு பணத்தைக் கட்டிக் கொள்கிறார்கள். வரும்வழியில் ஈரோட்டுக் காரர் ஒருவரின் உணவகத்தில் மெட்ராஸ் தாளியை வாங்கியதால் அப்பளம் நொறுங்காமல் சுமக்க வேண்டியிருந்தது. சாலைகளின் இருமருங்கிலும் பசுமை, சாலை விதிகளில் சீர்மை, இறங்கிய விடுதியோ இனிமை. மாலை நடையில் மேப்பிள் மரங்களை ரசிக்கமுடிந்தது. இராட்சச மரங்கள் மின்சாரக் கம்பாகப் பயன்படுவதைக் காணமுடிந்தது. குருவிகள் கூட குசும்பு செய்து நடப்பவர்களுடன் விளையாடியது. காமன்வெல்த் நாடுகள் எதைச் செய்கிறதோ அதற்கு எகனைக்கு மொகனையாகச் சில பழக்கங்கள் உள்ளன. உதாரணம் வலதுபுற வாகன ஓட்டம், நீளமான பிளக்பாண்ட், மின்னழுத்த வேறுபாடு. இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற கைப்பேசிக்கான மின்னேற்றி அங்குப் பொருந்தாமல் போனதால் இறுதியாகத் தொலைக்காட்சியிலிருந்த யுஎஸ்பி தடத்தில் மின்சாரத்தைத் திருடி கைப்பேசி வயிறு வளர்த்தது. வானம் இருட்டும் வரை காத்திருந்து காத்திருந்து அன்றைய பொழுது நீண்டிருந்தது அட உண்மையிலேயே பகல்பொழுது அதிகம்தான்.

அடுத்தநாள் மாலை காரைக்குடி உணவகத்திற்கு குமார் ரத்தினம், சிவன் இளங்கோ, மருத்துவர் சம்பந்தம் உடன் சென்று பொழுது கழிந்தது. திரு. சம்பந்தம் ஒரு புற்றுநோய் மருத்துவர் மட்டுமல்ல தீவிர இலக்கியப் பிரியரும் கூட. வாசகர் வட்டம் வைத்து நோயாளி ஆனவர்கள் உண்டு ஆனால் நோயாளிகளைக் கொண்டு திருக்குறள் வாசக வட்டம் ஒன்றை உருவாக்கியவர் இவர். மேலும் ஹார்வர்ட் தமிழ் இருக்கை பெருங்கொடையாளருள் ஒருவர். அங்கு இளங்கோ அவர்களின் கேள்வி ஆர்வமும் சம்பந்தத்தின் சைவ இலக்கியப் பேச்சு சைவ பிரியாணியைவிட அட போட வைத்தன. அன்றிரவே பேராசிரியர் சுவர்ணவேல், பதிப்பாளர் திருமூர்த்தி ஆகியோர் வந்தடைய விடுதியே நிறைந்தது.

சனியன்று காலைச் சிற்றுண்டியைப் புசித்துவிட்டு மருத்துவருடன் சி.என்.டவர் நோக்கி பயணம் அமைந்தது. பாக்கிஸ்தான் ஓட்டுநர் வாகனத்தை ஒட்டிக் கொண்டே பேசிக்கொண்டுவந்தார். அவ்வூரே ஆசியர்களின் வரவால் நிறைந்ததை அறியமுடிந்தது. குறிப்பாகத் தமிழர்களும், சீனர்களும் அதிகமாக வாழ்கிறார்கள். தூய்மையான நகரமாகவே இருக்கிறது. வீடுகள் அனைத்தும் மரத்தாலேயே கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒரே தோற்றத்திலேயே வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர். சி.என். கோபுரத்தின் கீழே பல வணிகப் பகுதியாக இருந்தாலும், சிமெண்டாலானா பெரிய தூண் அதற்கு மேலே ஒரு கண்ணாடி மாடம். 58 வினாடியில் மணிக்கு 22கிமீ வேகத்தில் மின்தூக்கி மக்களைத் தூக்கிச் செல்கிறது. இராமேஸ்வரத்தில் இராமர் பாதத்தில் நின்று நகரத்தையே பார்த்த அனுபவத்தை அம்மக்களுக்குத் தருகிறது. பின்னர் அருகில் இருந்த மீன் காட்சியக்கத்திற்கு மருத்துவர் அழைத்துச் சென்றார். வண்ண வண்ண மீன்களைப் பரிணாமத்தின் அத்தனைக் கோணத்திலும் காணமுடிந்தது. மெல்லுடலிகளின் சிலிர்ப்பு பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை. முழுக்காட்சியகமும் செயற்கை நீர்ப் பகுதியாகப் பல்வேறு இராட்சச எந்திரங்களின் துணையுடன் பராமரிக்கின்றனர். இவற்றை எல்லாம் பெருங்கடலில் இயற்கை எளிதாகச் செய்து பல்லுயிர்களை வாழச் செய்கிறது என்பது கொடைதான்.

டொரோண்டோவின் மையப்பகுதியில் வீதிகளில் சுற்றி பின்னர் இந்திய உணவகம் ஒன்றில் உண்டுவிட்டு ரயிலில் பயணம் தொடங்கியது. அங்கும் இருபால் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நவீனமாகப் பதாகையில் எழுதிவைத்துப் பிச்சை எடுக்கிறார்கள். ரயில்நிலையத்தில் நுழையும் போதே கட்டணம் செலுத்த வேண்டும் பின்னர் எங்கு வேண்டுமானாலும் ஒருவழிப் பயணம் செய்யலாமாம். ரயில்நிலையத்தின் அருகே பேருந்து நிலையம் அமைந்திருப்பதால் ரயில் கட்டணத்திலேயே பயணம் செய்யலாம். ஒவ்வொருவராக விசாரித்து, சரியான ரயிலில் ஏறி, சரியான நிறுத்தத்தில் இறங்கி, சரியான பேருந்தைப் பிடித்து மார்க்ஹம் அடைய முடிந்தது. கூகிள் மேப்பில் மட்டுமல்ல வழிநெடுகே வழிகாட்டிய மக்களிடமும் விருந்தோம்பலைக் காணமுடிந்தது.

அன்று(ஜூன் 18) மாலை ராடிசன் ஓட்டலில் நடந்த இயல் விருது விழாவில் முன்கூட்டியே அனுமதி வாங்கிய சுமார் 150 கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்குள்ளும் ஒரு நீண்ட மொழியார்வம் இருந்தது. அங்கேயே வளர்ந்த குழந்தைகள் கூட தமிழில் சரளமாகப் பேசுகிறார்கள். அ.முத்துலிங்கம், கங்காதரன், காலம் ஆசிரியர் செல்வம், விக்கிப்பீடியா நக்கீரன், அரவிந்தன், பாமினி எழுத்துரு உருவாக்குநர் சசிஹரன், மருத்துவர் ஸ்ரீஹரன் எனப் பலரை முதன்முதலாகச் சந்திக்கமுடிந்தது. மயூரநாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பெயர் தெரியாத பலரும் முகம் மலர்ந்து வரவேற்பதில் ஒரு பேரன்பைக் காண முடிந்தது. கணித்தமிழ் வளர்ச்சி என்பது ஓர் இரவில் வந்ததல்ல, நீண்ட நெடிய வரலாறு உண்டு அந்த வளர்ச்சி இல்லாமல் இத்தகைய கருவிகள் சாத்தியமில்லை. ஏற்புரையில் இவ்விருதினைக் கணித்தமிழ் முன்னோடிகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. பேராசிரியர் மு.இளங்கோவனின் பாட்டுடன் சிறப்புரை, பிருந்தா பெக்கின் தமிழ்ப் பேச்சு, விக்கிப்பீடியர் சந்திப்பு, சம்பந்தம் ஐயாவின் பேச்சு, முத்துலிங்கம் ஐயாவின் நேர மேலாண்மை போன்றவை முத்தாய்ப்பாய் அமைந்தன. இரவு விருந்திற்கு திருமூர்த்தி குடும்பத்தினர், சம்பந்தம், மு.இளங்கோவனுடன் சிவன் இளங்கோ வீட்டிற்குச் செல்ல, அங்கோ திருமதி இளங்கோ தடபுடலாகச் சமைத்துவிட்டார். தொல்காப்பியம் முதல் நாட்டார் பாடல் வரை இரவு 12மணிவரை கதை பேசி, அத்தம்பதியினரால் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

மறுநாள் காலை ஹார்வர்ட் நிதி திரட்டல் நிகழ்வும் முக்கிய நபர்கள் பங்கேற்க சதன் அரோமாவில் சிறப்பாக நடந்தது. மயூரநாதன், செல்வி ரேணுகா மூர்த்தி உட்பட பலர் நிதிக் கொடை அளித்தனர். நண்பகல் பயணத்தில் தமிழ் வணிகர்கள் மட்டுமிருக்கும் வணிக வளாகங்களைக் காணமுடிந்தது. மண்பானை, புதுப்பட குறுந்தகடு, முக்கிய வார தமிழ் இதழ்கள் என ஏறக்குறைய தமிழகத்தில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் அங்குக் கிடைக்கின்றனவாம். இரவு அ.முத்துலிங்கம் வீட்டில் விருந்து காத்திருந்தது. அவரின் சில கதைகளைப் படித்திருந்தாலும் அவரைப் பற்றி அதிகம் தெரியாமல் போனதால் நெடிய உரையாடல்கள் அமையாமல் போனது. அந்த இலக்கியவாதிக்குள் ஒரு குழந்தை மனநிலையைக் காணமுடிந்தது. சில இலங்கை உணவுகளுக்கு அன்போடு அறிமுகம் கொடுத்தார். வீட்டெல்லாம் பலநாட்டுக் கலைப் பொருட்களை அடிக்கிருக்கிறார். சிலைகளைக் கடத்தியனுப்பும் தமிழகத்திலிருந்து வந்து பார்க்கையில் "யோக்கியன் வாரான் சொம்பைத் தூக்கி உள்ள வை" என்று அப்பொருட்கள் சொல்லியிருக்கலாம்.

அடுத்தநாள் விவேகானந்தன் அவர்களுடன் சரவணபவன், அந்தவூர் டாஸ்மாக்(வேடிக்கை பார்க்க), வாகன நிலையம், விற்பனைக் கூடம் என மூலை முடுக்கெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நண்பர் சிவா ரத்னசிங்கமுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றது அந்தப் பயணம். அதன் வழியில் திராட்சைத் தோட்டங்கள் உலகப் புகழ் பெற்ற கனடா ஒயின் தயாரிப்பிற்குப் பயன்படுகிறதாம். நெடுஞ்சாலையின் மேற்புறத்திலேயே போக்குவரத்து ஆலோசனைகளை மின்சாரப் பலகையில் சொல்லிவிடுகிறார்கள். வழியெல்லாம் தமிழக அரசியல், கனடா வாழ்வுமுறை பற்றி அதிகம் விவாதித்துக் கொண்டே பயணம் அமைந்தது. கனடா அமெரிக்க எல்லையில் அமைந்த அந்த நீர்வீழ்ச்சி மற்ற நீர்வீழ்ச்சி போல மலையிலிருந்து நீரைக் கொட்டாமல் தரையிலிருந்து பள்ளத்தாக்கில் நீரைக் கொட்டுகிறது. அந்த நீர் வீழ்ச்சியின் புகழுக்கான பெறுமானத்தை உணர முடிந்த வேளையில் 'மடை திறந்த வெள்ளம்' என்ற இலக்கிய உவமானத்தையும் புரிந்து கொள்ளமுடிந்தது. அன்றிரவு விவேகானந்தன் வீட்டிலேயே தங்க நேர்ந்தது. அவர் இலங்கை நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் வாசிக்கும்போது வரும் ஒரு கற்பனை வீடுகளை அப்பகுதியில் குடியிருப்புகளாகக் காண முடிந்தது. வீட்டுக்கு ஒரு மரம் வாசலில் அபிநயம் செய்து கொண்டிருந்தது. நம்மவூர் அரசமரத்து அம்மன் போல அங்கு மேப்பிள் மரத்து அம்மன் அருள்பாலித்தார். டொரோண்டோ ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு விக்கிரகமும் தனித்தனி சந்நிதியில் ஒரே பெரிய கட்டடத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்தது. தேர், இராஜகோபுரம், தொட்டி வேப்பமரம், கனேடிய திராவிடக் கட்டடக் கலை கவர்ந்தன. அங்குக் கொடுத்த சாம்பார் சாதத்தை உண்டுவிட்டு விமான நிலையம் நோக்கி செல்ல நேர்ந்தது. கனடாவில் மலிவாக ஏதாவது கிடைத்தால் வாங்கிவர வீட்டிலிருந்து சொன்னார்கள் எனவே ஒரு கிலோ தக்காளி வாங்கி இருக்கலாமே என்று அன்றைய விலை நிலவரம் நினைவூட்டியது. இருந்தும் பொருட்கள் எதுவும் வாங்காமல் மக்களின் அன்பையும், அன்பளிப்பையும் வாங்கிக் கொண்டு செய்நன்றிக் கடனுடன் விமானத்தில் ஏற நேர்ந்தது. அந்த விமானம் சில மணிகளில் மேப்பிள் தேசத்து மேகங்களுக்கு மறையத் தொடங்கியது.

No comments:

Post a Comment

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது