
முதலில் வெளிவந்த மைக்ரோ பதிவு என்பது டிவிட்டர் கீச்சுகளின் தொகுப்பு. அதற்கு நிரல் எழுதி மொத்தக் கீச்சுகளையும் திரட்டி, சிறந்தவற்றைத் தேர்வு செய்ய நிரலால் எடுக்கப்பட்ட அந்தக் கீச்சின் பிரபலத்தன்மை அதாவது மறுகீச்சு, விருப்பங்களின் எண்ணிக்கை ஒரு பெரிய காரணியாக இருந்தது. அதில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததுடன் பணி முடிந்தது. வேறு சில நண்பர்களுக்கு பிளாக்கர் பதிவுகளையும், வேர்ட்பிரஸ் பதிவுகளையும் பிஎச்பி கொண்டு மொத்தத் தொகுப்பாகத் திரட்டிக் கொண்டுத்த அனுபவமுண்டு ஆனால் இந்த நூலானது பேஸ்புக்கிலிருந்து திரட்ட வேண்டியிருந்தது. பொதுவாக பேஸ்புக் பழைய பதிவுகளைத் தொகுத்துத் தரும் வாய்ப்பை வழங்குவதில்லை. அதை முறியடித்து மொத்தப் பதிவுகளையும் எடுத்துத் தரும் வகையில் ஒரு ஜாவாஸ்கிரிப்ட் எழுதப்பட்டது.
இதன்மூலம் ஆண்டு வாரியாக பேஸ்புக் நிலைத்தகவல்களை எல்லாம் எடுத்து கூகிள் விரிதாளில் இட்டோம். பின்னர் அதில் கவிதைகளை மட்டும் பிரித்தெடுத்து இரு வேறு நபர்களுக்கு இந்தக் கவிதைகளை மதிப்பிட அனுப்பினோம். அவர்களுக்கும் அலுப்பு தட்டாதவாறு கைப்பேசியிலிருந்தவாரே ஒவ்வொரு கவிதையாகப் பார்த்து தரவரிசை இடும்வகையில் அந்த இடைமுகம் அமைந்திருந்தது. அம்மதிப்பீட்டின் விளைவில் முதன்மையான கவிதைகளை மட்டும் எடுத்து நானும் ராஜா சந்திரசேகரும் ஒன்றிற்குப் பலமுறை புடம்போட்டுப் பார்த்து, கவிதைகளை இறுதி செய்தோம். உதவிக்கு வாணி கொண்டு முக்கிய எழுத்துப் பிழைகளையும் நீக்கி ஒரு வடிவம் வந்தது.
அவற்றைப் புத்தகமாக்க அப்படியே எடுத்துப் போட்டு நூலாக்கவில்லை, ஏனெனில் வடிவமும், வரிசையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்தோம். அதனால் பக்கத்திற்கு இருகவிதை என கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் கொண்டு தான்னியக்கமாக கூகிள் டாக்ஸில் இட நிரலும் தயாரானது. கவிதையின் உயர்த்திற்கு ஏற்ப ஒரு பக்கத்தில் சரியான இடத்தில் தானாக இதுவே நிறுத்தும். அதனாலோ என்னவோ தயவு தாட்சணியம் இன்றி கழித்துப் போட்டும், எழுதிப் போட்டு மிதக்கும் யானை வளர்க்கப்பட்டது. பவனம் என்ற ஒரு கூகிள் எழுத்துருவை முழு நூலும் பூசிக்கொண்டது. ஒவ்வொரு கவிதைக்கும் இடையே இறங்குமிடம் வேண்டும் என்பதால் கொஞ்சம் வெற்றிடம் தந்து பக்கத்திற்கு இரு கவிதைகள் அமர்ந்து கொண்டன. நூலை சிறியதாக அச்சடிக்கலாமா என யோசித்த போது மிதக்கும் யானை எனப் பெயரிட்டு, புத்தக அலமாரியில் பூனை போல அடுக்கப்படக் கூடாது என கிரவுன் அளவு இறுதியானது. அச்சுக்கு வேண்டிய அளவான கிரவுன் அளவில் பக்கத்தை மாற்ற கூகிள் டாக்ஸில் மார்ஜின் அளவையும் ஹெட்டர், புட்டர் அளவுகளையும் மாற்றி அமைக்க வேண்டும். உள்ளடக்கம் தவிர இதர பக்கங்களில் பக்க எண் தேவையில்லை. அவற்றை மாற்ற பேஜ் பிரேக் செக்ஷன் கொடுக்கவேண்டும். அவ்வாறு செய்த பின்னர் கச்சிதமான நூலாக பிடிஎப் வடிவில் வந்தது அச்சுக்குச் சென்றது.
பொதுவாக அச்சுக்கான நூல் இன்டிசைனில் தயாரிப்பார்கள். ஆனால் இந்த நூல் அப்படியில்லாமல் முழுக்க மேகக் கணினியில் கூகிள் டாக்ஸ், கூகிள் ஷீட் எனக் கொண்டு உருவானது. அதற்கேற்ப அளவுகளையும், ஒப்பீடுகளையும் சந்தியா நடராஜன் கொடுக்க ஒருவேளை கூகிள் டாக்ஸில் தயாரிக்கப்பட்ட முதல் அச்சு நூலாகக் கூட இருக்கலாம். இந்த மிதக்கும் யானை வானத்து மேகத்தில் மிதக்கவில்லை என்றாலும் கணினி மேகத்தில் மிதந்து வந்தது என்பது புக்மார்க் செய்து கொள்ளவேண்டிய தகவலாகும்.
அற்புத பணி வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லது... நன்றி...
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteபாராட்டுகள்
அருமை
ReplyDeleteவாழ்த்துகள்
வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கள்
ReplyDelete