Pages - Menu

Wednesday, March 2, 2011

தோசைமணியும் மக்கள்தொகையும்

"ஒரு குடும்பம் இரு குழந்தைகள்" என விளம்பரப்படுத்தப்பட்டு அடுத்து "ஒரு குடும்பம் ஒரு குழந்தை" என மாறிவிட்டது. இன்னும் இத்தகைய வாசகங்கள் அந்த தென்னந்தோப்பு பெரியாஸ்பத்திரியிலும், கம்மாக்கரை பால்வாடியிலும், காரவீட்டுக் காம்பௌண்டிலும் காணக்கிடைக்கலாம். சச்சின் சிக்ஸர் அடிச்சாலும், கலியாணத்துக்கு பத்திரிகை அடிச்சாலும் முதல் போஸ்டர் சுவரானா அரசு பேருந்துகள் மட்டும் அக்கடாவென சும்மாயிருக்குமா? அங்கும் அரசு எந்திரங்கள் மந்திரம் போடத் தொடங்கியது, சுவரில் விளம்பரம் செய்யும் பிளாஸ்டிக் அச்சுக்களை மலிவு விலையில் வாங்கி, நிற்க்கும் இடம், உட்காரும் இடம், தொங்கும் இடம்[படி] என டிரைவர் இடம் தவிர எல்லாவிடத்திலும் "நாம் இருவர் நமக்கு ஒருவர்", "ஒரு குழந்தையிருக்க மற்றொன்று அதற்கு?" என்று அடித்து விளையாடினார்கள். அது போக ரிக்ஷா போலவுள்ள ஆட்டோக்களிலும் ஆட்டோ போலவுள்ள ரிக்ஷாக்களிலும் 'சிறு குடும்பம் பெருவாழ்வு' என சைடு கேப்பில் தத்துவங்கள் எழுதிவைப்பார்கள். அதைப்படித்துத் திருந்திய சில நல்லவர்கள் சொந்தமாக சைக்கள் வாங்கி பயணிக்கத் தொடங்கினார்கள் {அப்புறம் என்னங்க! அட்வைஸ் பிடிக்காதுன்னு தெரியாதா!}. அரசியல்வாதிகள் அங்கும் ஊழல், பெயிண்டை திருடி வீட்டு ஜன்னலில் எல்லாம் அடித்துக் கொண்டார்கள் அதோடு விடாமல் பதினாறு பிள்ளைகள் வேறு பெற்றுக் கொண்டு அடுத்த எலக்சனுக்கு புதிய தொகுதியை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தோசைமணிக்கு வேறு வேலை இல்லாததால் பார்க்காத மாதிரி இருந்துவிட்டான் வாசகங்களையும் சேர்த்து. 2000 செப்டம்பரில் நூறு கோடியை இந்தியா எட்டிவிட்டது[கோடிக்கு எத்தனை சைபர்? அதுவாமுக்கியம் கதைய கேளுங்க..] பஞ்சாயத்து சில பேரூராட்சி ஆகி, முனிசிபால் சில கார்புரேஷன் ஆகி போர்டுகளை மட்டும் மாத்திக் கொண்டாங்க.



அதன் பின்னர் வேலையில்லா திண்டாட்டம், சினிமா ரசிகர் மன்றங்கள், டீக்கடை பெஞ்சுகள், கோவிலில் பிச்சைஎடுப்போர், முக்கியமாக டாஸ்மாக் முதலியவற்றின் எண்ணிக்கைகள் பெருகிக் கொண்டு சென்றது, செல்கிறது. ரசிகர் மன்றங்களுக்கு சம்பளம் கொடுத்திருந்தாலோ, பிச்சைஎடுப்பவர்களை ரசிகர் மன்றங்கள் துவக்கவிட்டிருந்தாலோ, டாஸ்மாக்கில் டீயும், டீக்கடையில் சரக்கும் கொடுத்திருந்தாலோ இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நீங்கள் சொல்வது புரிகிறது ஆனால் புரியவேண்டியவர்களுக்குப் புரியவில்லையே!. அந்த நாட்டில் நிலவுடன் பேட்டிகண்டு நியூட்டனுடன் போட்டி கொண்டு பத்திரிகைகள் செய்திகள் தர, நாம் மட்டும் மான் போலவும் மயில் போலவும் ஆடிவதை செய்தியாகப் படித்து பூரித்துப் போனோம். தோசைமணிக்கு கோபம் வந்தது; காலம் சுழண்டது; மாதங்கள் சுழண்டது; வாழ்வும் இருண்டது, இதனால் பக்கத்து நாட்டின் விலைவாசி குறைந்துவிட்டது[நம்ம நாட்டு விலை ஏறிவிட்டதுன்னு அர்த்தம்] ஆ..ஊ..னு வெளிநாட்டுக்குப் போனவுங்க ஐயோ..அம்மா..னு விரட்டுனால் ஒழிய நாடுதிரும்பாமல் டாடாக் காட்டிவிட்டார்கள். அப்படியே அந்த நாட்டில் உள்ள கவர்னராகவும், விஞ்ஞானியாகவும், டாக்டராகவும், ராக்கெட் விட்டுக்கொண்டும் இருந்துவிட்டார்கள். ஆனால் இங்கே தோசைமணிக்கோ மேசை துடைக்கும் வேலை கூடயில்லை.

அந்த நேரத்தில்தான் தோசைமணி சுண்டல் சுற்றிய பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான்; அதில் மனிதவளம் என்கிற அத்யாயத்தில் மக்கள் வளம் ஒரு மாபெரும் சொத்தாக ஒரு லெக்சர் இருந்தது. வேலைதேடுவதற்கு பதில் வேலையை உருவாக்கும் கல்வி வேண்டும்; கற்க கசடற; அனுபவங்களை மட்டும் படி அனுகூலங்கள் ரெடி என்றெல்லாம் மூளையை சுடாக்கியது அந்த செய்தி; நாட்டின் சராசரி தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முயலாமல் சொந்தக்காரர்களின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முனைந்தது ஏன்? என அரசைப் பார்த்து வாத்தியார் மாதிரி கேள்வியெல்லாம் இருந்தது{பக்கத்தில் ஆன்சர் வேறஇல்லை}. உலக மக்கள்தொகையில் 17% இங்கு இருந்தும், உலக GDP வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 2% என்று நம்பமுடியாத உண்மையை மெய்யாலுமே சொன்னது. மக்கள் வளம் உள்ளது ஆனால் திட்டமிட்டு தொழில் செய்ய தெரியாததால் அடுத்த நாட்டின் வேலையை அவுட் சோர்சிங் வாங்கி செய்கிறது என்று புத்திமதி சொல்ல வந்தது. ஒவ்வொரு ஆண்டும் 7% மக்கள் அதாவது மொத்த ஜெர்மனி மக்கள்தொகை அளவிற்கு இங்கு பட்டதாரிகள் உருவாகிறார்களாம் ஆனால் ஜெர்மனியின் தனிநபர் வருமானம் 17 ரேங்காம், நாம 137 வது ரேங்காம் என கன்னாபின்னாவென விஜயகாந்த் போல புள்ளிவிரங்களை அடிக்கியிருந்தது. தோசைமணியின் கண்கள் சிவந்ததை யாரும் கவனிக்கவில்லை; நவீன பொருளாதாரத் தந்தை ஆடம் ஸ்மித் போல இவன் மீது ஒரு ஒளிவட்டம் தெரிந்திருக்கலாம். மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமா? கட்டியாள வேண்டுமா? என்கிற கொக்கி வரிகளுடன் பக்கம் முடிந்திருந்தது.

இந்தியர்கள் அனைவரும் வருமானவரி கட்டும் அளவு சம்பாரித்தால் நாட்டில் வேற வரி எதுவும் இருக்காது என்று எழுதியிருந்ததை கவனித்தானா என தெரியவில்லை ஆனால் வருமானம் இருந்தால் வரி கட்டியிருப்பேன் என புலங்காகிதப்பட்டான். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இருபதாவது நாடு பிரான்ஸ் என்று வந்தது {என்ன தமிழ் நாட்டைவிட ஒரு மில்லியன் குறைவு} அப்ப, சென்னை என்ன பாரிஸா என கேட்கத்தோன்றவில்லை. ஒவ்வொருவரும் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவேண்டும், அதன்மூலம் சமூக மற்றும் வணிக வருமானம் அதிகரிக்கும், அப்படியே NDP, GDP எல்லாம் வளரும் என்றும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த யோசித்தோமே தவிர கட்டியாள யோசிக்கவில்லை என்று முத்தாய்ப்பாய் முடிந்தது அந்த கட்டுரை. உடனே தோசைமணியும் தும்மி, எழுந்து ஒரு அபார சிகாமணி போல கிளம்பினான். வெறும் எழு பேரால் தொடங்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனத்தை நினைத்தானா இல்லை, இரண்டு மாணவர்களால் தொடங்கப்பட்ட கூகுளை நினைத்தானா இல்லை, பக்கத்துவீட்டு தோசைக்கடை முதலாளியை நினைத்தானாவென தெரியவில்லை ஏதோ பில்கேட்ஸ் போல யோசிக்கத் தொடங்கினான். இந்தியா உலகில் நாலாவது பணக்கார நாடுதான் ஆனால் 18 பிரான்ஸ் போலவும் 19 பிரிட்டன் போலவும், 20 இட்டாலி போலவும் மக்கள் தொகையை வைத்துக் கொண்டு இந்தப் பணத்தை வைத்து என்ன செய்யமுடியும்? தோசைமணி போல சுண்டல்தான் வாங்கி சாப்பிடமுடியும். சரி இந்தப் பக்கத்தைப் பார்த்த தோசைமணி என்ன செய்தான் என்பது தான் கதையின் க்ளைமாக்ஸ். பேப்பரைப் பார்த்தான் என்பது உண்மைதான் ஆனால் தோசைமணி ஆசையுடன் படித்தது அந்தப் பக்கத்திலிருந்த நடிகையின் டிவைஸ் கேஸ் பற்றிய துணுக்கை மட்டும்தான். இந்த தேசத்திலுள்ள மற்ற தோசைமணியைப் போல இவனும் வேலையை தேடிக்கொண்டே இருக்கிறான்......

5 comments:

  1. இந்தியர்கள் அனைவரும் வருமானவரி கட்டும் அளவு சம்பாரித்தால் நாட்டில் வேற வரி எதுவும் இருக்காது என்று எழுதியிருந்ததை கவனித்தானா என தெரியவில்லை ஆனால் வருமானம் இருந்தால் வரி கட்டியிருப்பேன் என புலங்காகிதப்பட்டான்.


    .... தோசை மணி - அவர் மூலமாகவே நாட்டு நடப்புகளின் தாக்கத்தை கூறி இருப்பது அருமை.

    ReplyDelete
  2. எங்கெங்கு பார்க்கினும் தோசைமணிகள் தான் போலும்...! :-)

    ReplyDelete
  3. நாட்டு நடப்பைச் சித்திரமாகத் தீட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. நாம் எல்லோருமே தோசை மனிதனே....

    ஒழுங்காக சுவிஸ் மற்றும் இதர வங்கி கணக்குகளை கண்டுபிடித்தாலே இந்தியா பணக்கார நாடாகிவிடும். இந்த நாய்கள் அதை செய்யப்போவதும் இல்லை, தோசைமணி ஆகிய நாம் நடிகைகளின் இடுப்பில் இவை எல்லாம் நினைப்பதே இல்லை.

    ReplyDelete
  5. @Chitra
    @சேட்டைக்காரன்
    @இராஜராஜேஸ்வரி
    @பலே பிரபு
    நன்றிங்க நண்பர்களே

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது