Pages - Menu

Tuesday, April 24, 2012

டைம் மெஷின்


"... சரி முடிவா நாளைக்கு வாங்க கணக்கை முடுச்சுக்கலாம்" என்று போனை அணைத்தான். அப்போது மணி 23:00 என காட்டிக்கொண்டிருந்தது, இன்னும் சூரியன் மறையவில்லை. நேற்றைய பொழிவை விட இன்று காஸ்மிக் கதிர்களின் எண்ணிக்கைக் குறைந்தேயிருந்தது. அதன் அதிர்வெண்கள் கணிக்கக் கூடியதாகவே இருந்தது. வானமும் மிதமான வெப்பநிலையும் அதிகம் மேகமும் இல்லாமல் அதிகமான பறவைகள் பறந்து கொண்டிருந்தன. மசால் வடை வாங்கி வந்த வேலைக்காரன், "ஐயா! இந்த கடிகாரத்துக்கு பேட்டரி தீர்ந்துருச்சு நாளைக்கு வரும் போது புது பேட்டரி வாங்கி வரவா?" என்றான். சிரித்துக் கொண்டே "அதை நாளைக்கு சொல்லுறேன்" என்றான் வினித். கொஞ்சம் தயங்கித் தயங்கி கிளம்பவா என்ற வேலைக்காரனிடம் "கவலைப்படாதே நாளைக்கு உன் சம்பள பாக்கி அனைத்தும் தருகிறேன்" என்று கனிந்தான் வினித்.அன்று, பக்லரின் நண்பர் பேஜியிடம் இருந்து அழைப்புகள் வந்த வண்ணமிருந்தது, எதற்கும் பதில் சொல்லவில்லை. கடன்பட்டார் நெஞ்சம் போல இருக்கவேண்டிய இவன் முந்திரி பட்டர் பிஸ்கட் போல குஷியாகயிருந்தான்.

வினித், கொலம்பியா யுனிவர்சிடியில் படித்த காஸ்மாலஜிஸ்ட் பேன் பக்லரின் அசிஸ்டன்ட். பக்லர் ஒரு வித்தகர், விஞ்ஞானி, ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவ பேராசிரியர். அவரின் முதல் மற்றும் கடைசி அசிஸ்டன்ட் இவன் என்ற காரணத்தால் பக்லர் தனது முதல் மற்றும் கடைசி கண்டுபிடிப்பான ரகசிய டைம்மெஷினை பற்றி கொஞ்சம் கற்றுக் கொடுத்துள்ளார். அந்த மெஷின் பேசும், பொய் சொன்னால் கண்ணைக் குத்தும், வாட்ச் ரீபேர் எல்லாம் செய்யும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த வினித்திற்கு, ஒரு நாள் உண்மை தெரிந்துவிட்டது. அந்த மெஷினில் தனது எல்.கே.ஜி.யில் தொலைத்த கர்சீப்பை கண்டுபிடிக்க ஆசைப்பட்டான்; பத்தான் கிளாஸ்சில தொலைத்த சைக்கிளை கண்டிபிடிக்க ஆசைப்பட்டான்; தன்னை உதவாக்கரை என்ற காலேஜ் HODயின் மகளைக் கண்டிபிடிக்க ஆசைப்பட்டான் ஆனால் பக்லர் அதற்கு முன் ஆய்வுக்காக லண்டன் போய்விடார். அவன் தங்கியிருப்பது படீஸ்பர்க் நகரிலுள்ள பக்லரின் ஆய்வுக்கூடம். பக்லர் இருக்கும் வரை ஊரைச் சுற்றி பலருக்கு கடன் கொடுத்திருந்தார் அவருக்கு பிறகு விடாமுயற்சியின் பலனாக இன்று ஊரைச் சுற்றி கடன் வாங்கிவிட்டான்.

ஊரெல்லாம் கடன்வாங்கி அதனை அடைக்க மீண்டும் ஒரு கடன் வாங்கி அதனை அடைக்க மீண்டும் கடன் வாங்க முயற்சித்து காலைக்கடன் செய்கையில் சிந்தையில் சட்டென்று பட்டது ஒரு விஷயம், ஆப்பிளைக் கண்ட நியூட்டன் போல யோசிக்கத் தொடங்கினான். டைம்மெஷினை இயக்கும் வழிமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக பக்லரின் டயிரியிலிருந்து அறிந்து கொண்டான். மீண்டும் அதிகமாக கடன் வாங்கினான். கொஞ்சம்காலம் கழிந்தது; வானம் ஒருநாள் தெளிந்தது; அந்த நாள் இன்று வந்தது; பக்லரும் வீட்டுக்கு திரும்பும் நாள். வினித்துக்கோ அது பல நாள் திட்டத்தின் அறுவடை நாள். காலை விடிந்தது, வழக்கத்திற்கு மாறாக பலர் வீட்டு வாசலில் கடனை திருப்பிக் கேட்டுக் கத்திக் கொண்டிருந்தனர். அதில்வொருவர் "நீங்கள் கம்ளைன்ட் கொடுத்தாத்தான் இவனை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு போகமுடியும் ..." என்று போலீஸ் கம்பீரத்துடன் சொல்வது வினீத் காதில் விழுந்தது. சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்து, தனது திட்டப்படி டைம்மெஷின் மூலம் எதிர் காலத்திற்கு சென்று விட எத்தனித்தான். பட்டன்களை அழுத்து இயக்கத்தை முடுக்கிவிட்டான்.

பத்துவருடங்கள் முன்னோக்கி பயணித்து அதே இடத்தை அடைந்தான். பெரிய யுகப்புரட்சி செய்த மகிழ்ச்சியில் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தான். "நீங்கள் கடன் வாங்கிவிட்டு பத்து வருடம் தலை மறைவான குற்றத்திற்காக கைது செய்கிறோம்" என்றார் கைவிலங்குடன் வந்த ஒரு போலீஸ்.

அதீதம் இதழிலிருந்து மீள் பதிவாக இங்கும்

1 comment:

  1. உங்கள் பதிவைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரமிருப்பின் பார்க்கவும் http://blogintamil.blogspot.in/

    ReplyDelete

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது