கடவுள் மறுப்பாளர் நேரு தனது மறைவிற்குப் பிறகு அஸ்தியை இந்திய விவசாய மண்ணில் தூவ விரும்பிய போதும் அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைக்கவே விரும்பினார். இதை மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விருப்பமாகவே முன்வைத்தார். ஒரு சம்பிரதாயம் பிறருக்குத் தொந்தரவு தராமல் தன் மனதிற்குப் பிடித்திருந்தால் அது மூடநம்பிக்கையாகவே இருந்தாலும் செய்வதில் தவறில்லை. பெரியவர் கலைஞரின் மஞ்சள் துண்டாகட்டும், தலைவர் வைகோவின் கறுப்புத் துண்டாகட்டும், இராஜபட்சேவின் சிவப்புத் துண்டாகட்டும் அறிவியல் கடந்து சில நம்பிக்கைகள் எல்லாருக்கும் உண்டு என்பதை மெய்ப்பிக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் மரபணு அறிவியல் எல்லாம் பிள்ளையார் காலத்திலேயே இருந்தது என்று சமீபத்தில் பிரதமர் மோடி சொன்னார். அது உண்மையா பொய்யா என்று ஆராயாமல் அதை நம்பிக்கையாகக் கொண்டு புதுமுனைப்புடன் யாரேனும் முயலும்போது நன்மையே கிடைக்கிறது.
ஆனால் நம்பிக்கைகளைக் கண்மூடிக் கொண்டு எல்லா நேரங்களிலும் பின்பற்றுவதால் யாருக்கும் லாபமில்லாமல் போகும். கிழக்கேதான் தலைவைத்துப் படுப்பேன் என்று வடக்கும் தெற்கும் கொண்டுள்ள ரயில் இருக்கையில் முரண்டு பிடிக்கமுடியாதே. அதே நேரத்தில் வடக்கே உள்ள காந்தப்புலன் பற்றிய விவரம் தெரியுமேயானால் தெற்கில் தலைவைத்துப் படுக்கலாம். இப்படி பல விசயங்கள் ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் பல சந்தர்ப்பங்களில் தவிப்பவர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே இந்த ஓலைச்சுவடி என்ற நூல்.
தாளியோலை என்ற மலையாள மூல நூலைத் தழுவி எழுதப்பட்டுள்ள இதில் இந்து மதச் சம்பிரதாயங்களும் அதன் காரணங்களும், தியான மந்திரங்களும், மதக் குறியீடுகளும் அதன் காரணங்களும் கொண்டுள்ளது. அடுக்கடுக்காக இருநூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு ஆசிரியரின் விளக்கத்தையும் கொண்டுள்ளது. நூலில் கடைசிப் பக்கங்களில் இருக்கும் மந்திரங்கள் அதன் பயிற்சி பெற்றவர்களுக்கு உதவக்கூடும். மொழிநடையில் ஸ்ரீகோவில், விசுவாசம், அக்னிக் கோண் என்று சில வழக்கில்லாத சொற்களுக்கு மாற்றாக திருக்கோவில், நம்பிக்கை, அக்னிமூலை என்று பயன்படுத்தியிருந்தால் மூலக் கருத்தை உடனே புரியவைத்திருக்கும்.
தங்கக் கொலுசு, பாம்புக் கடி மருத்துவம் போன்ற சில ஆசாரங்கள் புதியதாக இருந்தாலும் காரணங்கள் சுவாரசியமாக இருக்கின்றன.
சோளக்காட்டு பொம்மையின் தேவையைப் புரிந்துகொள்ளும்போது வீட்டில் தொங்கவிடும் அகோர உருவங்களின் தேவை நம்மை கேள்வி கேட்கிறது. மாவிலைத் தோரணம், வெறும் காலில் நடத்தல், திலகமிடுதல், கோபத்தைக் குறைத்தல், பிரம்ம முகூர்த்தத்தில் எழுதல் எனச் சில தவற விடும் பழக்கங்களை மீண்டும் செய்யத் தூண்டுகிறது. காலாட்டுதல், ஆடிமாத திருமணம் போன்ற விசயங்களில் தவிர்க்கவும் தூண்டுகிறது. சில சம்பிரதாயங்கள் வேடிக்கையாகச் சொல்லும் பல பழமொழிகளில் ஒளிந்திருப்பது இதைப் படிக்கும்போது மனதில் தோன்றிவிடுகிறது.
பல விசயங்கள் இதில் சமய ஆசாரமாகச் சொல்லப்பட்டாலும் அவை உண்மையில் பண்பாட்டுக் கூறுகள் என்பதை மறுக்க முடியாது. அவை சமயம் தாண்டியும் கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. அறிவியல் பூர்வமாகவும் சில பழக்கங்கள் விளக்கப்பட்டுள்ளது நம்மை சிந்திக்கவைக்கிறது. இதை முழுதும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் காரணங்களை அறிந்து கொள்வதால் ஏதோவொரு வகையில் அந்த மூலத் தத்துவம் நம்மில் குடிகொள்ளலாம்.
தோப்புக்கரணம், துளசி தீர்த்தம், சூரிய நமஸ்காரம் போன்ற பல செயல்களின் அறிவியல் நமக்கே தெரிந்திருப்பதால் கூடுதலாகவே அறிவியல் விளக்கங்களைக் கொடுத்திருக்கலாம். சில இடங்களில் ‘தற்கால அறிவியல் இதை நிரூபித்துள்ளது’ என்று தெளிவாகக் கூறாமல் கூர்மையற்றும் இருக்கின்றன. எல்லாம் அறிவியல் மயம் என்று கொடுத்துவிட்டால் பக்திமனம் கமழாது என்று விட்டனரோ என்று தோன்றுகிறது.
முட்டை கொண்டு போகும் எறும்பு, முதல் மொட்டை எடுக்க வேண்டிய மாதம், குழந்தைகளுக்கு முன் கண்ணாடி காட்டாதல் போன்ற பழக்கங்கள் பொருள் கொண்டதாகவே நமக்கு உணர்த்துகின்றது. வாஸ்து அறிவியல், இயற்கை நேசிப்பு, மருத்துவப் பலன்கள் போன்ற தகவல்கள் வெவ்வேறு சம்பிரதாயங்களுள் இருப்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். சில தேவையற்ற கேள்விகளும் பதில்களும் தவிர்த்து மற்ற தகவல்கள் இரண்டு விசயங்களை உணர்த்துகின்றன. ஒன்று, முன்னோர்களின் ஆழமான அனுபவங்கள், மற்றொன்று இன்றைக்கு இழந்த நல்ல பழக்கவழக்கங்கள். வேண்டியதை கழித்து விரும்பியதை வளைத்து, முக்கியமானதை எடுத்துக் கொண்டால் பயனளிக்கக்கூடிய புத்தகம்.
சகுனம், நம்பிக்கை, வழக்கம் தொடர்பாக பலரின் பலநாள் கேள்விகளுக்கு இதில் பதில் உண்டு. பிற்போக்கான நம்பிக்கை என்று சொல்லப்படும் நம்பிக்கையின் சாரம் அறியும்போது அதை வேறுவகையில் எடுத்துக் கொள்ளவோ, கைவிடவோ இந்நூல் உதவும்.
வெளியே கிளம்பும்போது பேரக்குழந்தையிடம் முத்தம் வாங்கிக் கொள்வதும், மனைவியிடம் தண்ணீர் வாங்கிக் கொள்வதும் பெருவுவகை என்றால் அதை எப்படி ஒரு நல்ல சகுனமாகக் கொள்கிறோமோ அதுபோல காலத்திற்கு ஏற்ற நம்பிக்கைகளைப் பொருள் புரிந்து கடைப்பிடிக்கலாம். எதிரே ஒருவர் தும்மும்போது எப்படி நல்ல ஆசி வழங்கும் பழக்கத்தைத் தொடர்கிறோமோ அதுபோல தீட்டு, அபசகுனம் என்று பிறர் மனம் புண்படும் பழக்கங்களின் உண்மையறிந்து தவிர்க்கவும் வேண்டும். இதைப் படித்த பிறகு பண்பாட்டு மீதான தேடுதல் தொடங்குமேயானால் அதுவே இப்புத்தகத்தின் வெற்றி.
ஆன்லைனில் வாங்க: www.nhm.in/shop/100-00-0001-539-0.html
ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234
No comments:
Post a Comment
தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது