Pages - Menu

Thursday, January 4, 2018

மைக்ரோ பதிவுகள் - நூல் அணிந்துரை


அதாவது ..

"விடாமல் பிடித்திருக்கிறேன். இந்தத் தூரிகை என்னை ஓவியனாக்கலாம்.", "வெள்ளைத் தாளை குடிக்கிறது வரைந்த பூனை." இவை வரிகளல்ல காட்சிகள். அனேகமாக காட்சிகளும் அல்ல சாட்சிகள். எழுத்தின் சுவைக்கும், எண்ணத்தின் பலத்திற்கும் நீலக் கம்பளம் விரித்துக் காத்திருக்கும் இப்புத்தகத்தின் சாட்சிகள். 2010 காலகட்டம் தொடங்கி நான்கைந்து ஆண்டுகள் இணையத்தில் எழுதிய டிவிட்ஸின் தொகுப்பே இந்தப் புத்தகம். டிவிட்டரின் காலவெளியில் புதையுண்டு போன கடந்த கால கீச்சுகளைச் சேகரித்து இலக்கியவெளியில் நூலாக்குதல் ஒரு இனிப்பான முயற்சி. இது மைக்ரோபதிவுகளாகப் பிறந்தாலும் மாஸ் அதிர்வுகளை உண்டாக்கும் ஒரு வாசிப்பு அனுபவத்திற்கான நுழைவாயில். "மரத்தின் நாணம்
கலைக்கிறது
கிளை அசைத்துப்
போகும் அணில்" என்று எழுதியதைப் போல மனதின் தேக்கம் கலைக்கிறது கீச்சை படித்துப் போகும் இப்பக்கங்கள். நிற்க, இணையத்தில் எழுதலாமா? அப்படி என்ன இருக்கிறது?

முதல் கணினி கண்டுபிடிக்கப்பட்டதைவிட மேசைக் கணினி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே கணினி வரலாறு தொடங்குகிறது. இணையம் உருவானதைவிட இணையத்தளம் உருவான பின்னரே உரையாடல் தொடங்கியது. அதுபோல 1984ல் பிறந்தாலும் 2004 காலகட்டத்திற்குப் பின்னரே கணித்தமிழ் இணையத்தில் பரவலானது. வலைப்பதிவு, சமூகத்தளம் என எளிய மக்களின் கையில் தவழ்ந்த போதும் பத்திரிக்கைத் துறைதான் கணித்தமிழின் ஆதிமூலம். எழுத்தார்வம் கொண்ட பலரை ஈர்த்த இணையம் கருத்தாழம் கொண்ட படைப்புகளை உருவாக்கத் தவறவில்லை. பலர் தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் 2006ல் டிவிட்டரும் உருவானது. பெரும்பாலும் பிளாக்ஸ்பாட் போன்ற வலைப்பதிவும், ஆர்குட் போன்ற சமூகத் தளமும் தமிழ் எழுத்துக்காரர்களின் பசிக்குத் தீனிபோட்டன. திறன்பேசிகள் பரவலான பின்னர் அபரிவிதமான இணையப்பயனர்கள் தமிழில் சமூகத்தளங்களில் எழுதத் தொடங்கினர். குறுகிய தகவல், விரைவான பரவல், கையடக்கக் கருவிகள் எனப் பல அம்சங்கள் கொண்ட சமூகத் தளங்கள், வலைப்பதிவுகளைவிட அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். பேஸ்புக் போல் தனிப்பதிவுகள் அல்லாமல் பொதுப்பதிவுகளாக அதாவது யாரும் வாசிக்கக் கூடியது என்பதால் டிவிட்டர் இன்னும் ஒருபடிமேலே சிகரத்திற்கு வந்தது.

ஒரு நொடியில் பல ஆயிரம் கீச்சுகள் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. தமிழில் எழுதும் கீச்சர்களே சுமார் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் இருக்கின்றனர். தமிழ் தெரிந்த மொத்த கீச்சர்கள் இருபது லட்சமாவது இருப்பார்கள் என யூகிக்க முடியும். போலி கணக்குகள், பப்பெட் கணக்குகள், டிரோல் கணக்குகள் என்று எண்ண முடியாத கொசுறுகளும் உள்ளன. ஒரே நேரத்தில் கீச்சப்படும் பதிவுகளில் உள்ள குறிச்சொற்கள் கொண்டு டிரெண்ட் என்ற ஒரு யுக்தியை டிவிட்டர் கணிக்கிறது. இதனால் ஒரு சமூகமே எதைப்பற்றி அதிகம் விவாதிக்கின்றன அல்லது சூடான விவாதத்தை அறியமுடியும். இதுவொருவகையில் பயனர்களை எல்லாம் நுகர்வு கலாச்சாரத்திற்கு ஈர்க்கும் வழியெனலாம். ஊரே பேசும் விசயத்தில் நாமும் கருத்து சொல்வோம் என்ற மனநிலையைத் தூண்டுகிறது. பிறரின் கவனத்தைப் பெற அவசர நிலையில் கீச்சப்பட்டாலும் டிவிட்டரின் பலமே சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே. எழுதவே தெரியாதவர்களைக் கூட இதன் வசீகரம் வாசகராக உள்ளே இழுத்து, விமர்சகராக வளர்த்து, வித்தைக்காரராக்கியுள்ளது. இதன் பின்தொடர்பவர்களும், பதில் மொழியும், மறுகீச்சுகளும் படைப்பாளிக்கு உடனடி அங்கீகாரம். பத்திரிக்கைக்கு எழுதி வெளிவரும் வரை காத்திருந்து கருத்துக்களை அறியும் காலம் மாறி உடனுக்குடன் வாசகரும் படைப்பாளியும் உலாவிக் கொள்ளும் இடம்.

சமூகத்தில் இருக்கும் அத்தனை வித சூழல்களையும் டிவிட்டரில் காணமுடியும். வன்முறை தொடங்கி வாழ்முறை வரை அத்தனையும் அடக்கம். பணம் சம்பாரிக்க அலையும் கூட்டமுண்டு அதற்கான விளம்பரங்களைக் காணலாம். சமையல் குறிப்புகளோடு சுற்றும் மங்கைகளும் உண்டு, பிறந்தநாள், விடுமுறைநாள் வாழ்த்துச் சொல்லும் நங்கைகளும் உண்டு, அரசியல் விமரிசனம் செய்யும் கரைவேட்டிகளும் உண்டு, அதிகாரிகளைக் கேள்விகேட்கும் புகார்ப்பெட்டிகளும் உண்டு. சினிமா விமரிசனம் செய்ய டீக்கடைகளும் உண்டு, சிரிப்புவராமல் சண்டையிடும் ரசிகர்படையும் உண்டு. பிரபலங்களுடன் சாமானியர்கள் உரையாடும் வேளையில் சாமானியர்களுடனும் பிரபலங்கள் உரையாடுகின்றனர். டிவிட்டரில் கருத்துச் சொல்லி கைதாவதும், கைதானவருக்குக் கருத்து சொல்வது சாத்தியம். டிவிட்டரில் எழுதப்படும் நுண்பதிவுகளைக் கீச்சுகள் என்று அழைக்கிறோம். தமிழ் கீச்சுலகில் பெரும்பாலும் சினிமா, அரசியல் கீச்சுகளே பிரதானம். அடுத்ததாக உரையாடல்கள், பார்வர்ட் மெசேஜ்கள் அல்லது சுற்றில் விடப்பட்ட வாட்ஸப் குறுஞ்செய்திகளுக்கிடையே உண்மையான படைப்பாளிகளின் கீச்சுகளும் அங்கங்கே தெறிக்கும். இத்தகைய படைப்புகளைப் பல ஊடகங்கள் வெளியிட்டு அங்கீகரிக்கின்றன. இவற்றுக்கு விகடன் வலைபாயுதேவிலோ, குங்குமம் வலைப்பேச்சிலோ, தி இந்து வலைவீச்சிலோ, குமுதம் ரிப்போர்ட்டர் ஆன் லைன் ஆப்பிலோ, கண்மணி இதழில் வலையில் வசீகரித்தவையிலோ வந்த கீச்சுகளே சாட்சி.

கவித்துவமான கீச்சுகளைத் தாண்டி, ஒரு சமூக நிகழ்வினை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போன்ற உடனடி எதிர்விமர்சனங்கள், வித்தியாசமான கற்பனைகள், சமூகப்பார்வைகள், கலாய்ப்புகள் என்று நீளும் பட்டியலில் மீமீஸ்களும் அடக்கம். இயற்பியலில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எலக்ட்ரான் மாறும் போது ஆற்றல் வேறுபாடே ஒளியாக உமிழப்படுகிறது. அதுபோல எழுத்தில் சிந்தனைக் கோணத்திலிருந்து சிந்திக்காதக் கோணத்தில் காட்சிப்படுத்தும் ஒரு வர்ணனையே ரசனையை வாசகனுக்குத் தருகிறது. அவ்வகையில் டிவிட்டர் வழியே எனக்கு அறிமுகமான ராஜா சந்திரசேகரின் கீச்சுகள் ரசனையான சிதறல்கள். இவை கற்பனையின் பல்முனையையும் தொட்டு மனதில் பதிகின்றன. இவரின் கீச்சுகளில் குழந்தை, மழை, மௌனம், சொல் பெரும்பாலும் தவழ்ந்து, பொழிந்து, பேசி, இனிக்கின்றன. சிறந்த படைப்பு இன்னொரு சிறந்த படைப்பைத் தூண்ட வேண்டும். இந்தக் கீச்சுகளை நான்கு பக்கம் படித்தவுடன் புதிதாக நான்கு வரி உங்கள் விரலில் பிரசவிக்கக் காத்திருக்கும்.

"நமதிந்த இடைவெளிக்கு நமது நெருக்கம் தெரியும்.", "உங்கள் மீதே மோதிக் கொள்வதுதான் மோசமான விபத்து." என்று நச் கீச்சுகள் அதிகம். காதல், இயற்கை, குணம், ஏமாற்றம் என்று பல நிலைகளில் பல பொழுதுகளில் எழுதிய தொகுப்பில் கருத்துகள் ஒரே மாதிரி இல்லாமல் கலவையாக இருப்பது இதன் சுவாரசியம்.
"உளி பழக
செதுக்குகிறேன்
சிலை காண
அல்ல" என்று சொல்வதால் இவரின் சோதனைக் களமாக டிவிட்டர் இருந்திருக்கலாம். ஆனால் இவரின் சாதனைக் களம் மைக்ரோபதிவுகள். இதன் அடுத்த தொகுப்புகளும் அடுத்த வெற்றிகளும் தொடரட்டும்.

அன்புடன்,
நீச்சல்காரன்

அமெசானில்
தமிழ் இந்துவில்
தினமணியில்

No comments:

Post a Comment

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது