Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Wednesday, August 21, 2013


எடை கனமானாலும், வலுயில்லாததாக, தன்னால் மரபணு மாற்றப்பட்ட மரத்துக் கட்டையால் அடிவாங்கியதால், பலமான காயமின்றி எழுந்த ஹான்ஹி வினித்தைத் தேடத் தொடங்கினார். மூலிகையின் வாசனை வழியே பயணிக்கத் தொடங்கினார். தனது மூன்று மாதத் திருவிளையாடலின் பயனாக அந்த அபூர்வ மூலிகை வேர்களைக் கையாடல் செய்துவிட்டு, தனது திட்டப்படி இரகசிய இடம் நோக்கி மலை முகடுகளில் பயணித்துக் கொண்டிருந்தான் வினித்.

யாரிந்த வினித்? கரட்டூர் கானதன்யாசி என்ற ஜோசியரின் வாக்குப்படி பெரிய அரண்மனையில், தன் இனத்திற்கே தலைவனாக இருந்தவனின் மறுஜென்மம் தான் வினித்தாம். இந்த ஜென்மத்திலேயே முன்ஜென்மம் எடுக்கப் போகிறானாம். ஆனால் இதை எல்லாமல் துளியும் நம்பாத வினித், இந்திய மக்கள் தொகைக் கணக்கின் படி ஒரு மனைவி, மூன்று மகன்கள், நான்கு சகோதரிகள், இரண்டு தம்பிகள் என்று பெரிய குடும்பத்தின் மூத்த மகன். ஏறக்குறைய அனைத்துத் தொழில்களையும் முயன்று தோற்று, கடன்பட்டு, கஷ்டப்பட்டு, அடிபட்டு, ஊரைவிட்டு ஓடிவந்தவன். ஹான்ஹி என்ற சீன மருத்துவருடன் முதுமலைக் காட்டில் இதுவரை வசித்து வந்தான். ஹான்ஹி ஒரு இயற்கை மரபியல் ஆய்வாளர், எளிய மொழியில் சித்தர் என்றே சொல்லிவிட்டுப் போகலாம். தாவரங்கள் அல்லது விலங்குகளின் மரபணுக்களைச் சீண்டி புதிய குணங்களைக் கண்டுபிடிப்பதில் வல்லவர். வேப்ப மரத்தில் மாஞ்சுவையுடன் வேப்பங்கனிகள் உருவாக்குவார்; மாமரத்தில் வேப்பஞ்சுவையுடன் மாங்கனிகள் உருவாக்குவார்; எளிதில் உரிக்கக்கூடிய தேங்காய், காரமான பாவற்காய் என எவ்வளவோ செய்வார். ஆக ஒரு உயிரின் குணத்தையோ உருவத்தையோ மாற்றும் கலையில் கைதேர்ந்தவர். ஆனால் வெளியாட்களுடன் அவ்வளவாக பழகாதவர். முன்பு ஒருமுறை கள்ளக் கடவுச்சீட்டு பெற்று தான் நாடு கடக்க உதவிய ஒரே காரணத்திற்காக வினித்தைத் தன்னுடன் இருக்க அனுமதித்தார்.

வேறு வழியற்ற வினித்தும், தனது ஊருக்கே தெரியாமல் இவருடன் காட்டில் வசித்து வந்தான். ஹான்ஹி உடன் இருந்தபோது ஏதேனும் சூரணம், லேகியம் போன்று கற்றுவிட ஆசைப்பட்டான். முடியவில்லை. மந்திரம், மாந்திரீகம், வசியம் என்றும் ஏதும் அமையவில்லை. பப்பாளி மரத்தில் தக்காளி பறிப்பது, ஆலமரத்தில் நாவல் பழம் பறிப்பது, சர்க்கரைப் பாறையிலிருந்து சர்க்கரை சுரண்டுவது, பேசும் குரங்கிடம் அடிவாங்குவது என்றே காலம் நகர்ந்தது. அந்த ஜோசியர் சொன்னதும் அவ்வப்போது இவன் நினைவுகளில் வந்து சென்றது. இறுதியாக ஒரு நாள் ஒரு உண்மை தெரிந்தது, ஹான்ஹி என்பவர் போன ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு சித்தராம், ஒரு அரிய மூலிகையின் பயனாக பழைய ஞாபகங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அதே தமிழ்நாட்டிற்கே வந்தவராம். இதைச் சற்றும் எதிர்பாராத வினித் விண்ணைத் தாண்டுமளவிற்குத் துள்ளல் கொண்டான். ஒரு மாசி மாத மாலை நேரத்தில் மண்டையைத் தடவியவாறே மல்லாந்து ஹான்ஹி படுத்திருந்த வேளையிலே, கட்டையால் கபாலத்தில் அடித்து அந்த மூலிகையைக் கைப்பற்றினான் என்பதே வினித்தின் முன்கதை. ஹன்ஹி வினித்தை நோக்கியும், வினித் இரகசிய இடம் நோக்கியும் ஓடிக் கொண்டிருக்க வானம் இருள் வசமானது.

அந்த மூலிகையைக் குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் பழைய ஜென்மத்து உருவம் கிடைக்குமாம் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் இந்த ஜென்ம உடலை மீண்டும் பெறலாமாம். இதை நினைத்துக்கொண்டே வரவேண்டிய இடத்தை அடைகிறான் வினித். இராமசாமி பண்ணையாருக்கு ரெண்டு லட்சம், கருப்பாயி பேரனுக்கு ஒன்னரை லட்சம், மனைவிக்கு அஞ்சு பவுன், தங்கைகளுக்கு மூணு பவுன், மகனுக்கு சைக்கிள், கடைசியாக ‘உன் இனத்திற்கே தலைவன் என்று சொன்ன’ ஜோசியக்காரனுக்கு ஒரு பட்டு வேஷ்டி சட்டை என்று விருப்பப் பட்டியலையும் தயாரித்து முடித்தான். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, எடுக்கப் போகும் ஜென்மத்தில் இந்த ஜென்ம ஞாபகங்கள் மறக்கக் கூடும் என்று யூகித்து, வேண்டிய குறிப்புகளைத் தெளிவாக காகிதத்தில் எழுதிக் கொண்டான். மூலிகையைப் பக்குவப்படுத்த தொடங்குகிறான். காபி இராகத்தில் பாடல் பாடிக் கொண்டே காபியைக் குடித்துக் கொண்டிருந்த வேளையிலே ஒரு ஞான உதயம். முன் ஜென்மத்தில் ஹான்ஹியைப் போல வேறு நாட்டில் பிறந்துவிட்டால் என்றும் யூகித்து, பல மொழிகளில் தான் யார் தனது குடும்பம் எங்கே உள்ளது எப்படி இப்படியானேன் எனவும் எழுதி வைத்துக் கொண்டான். எல்லாம் தயார் நிலையில் இருந்தது, சூரிய உதயம் வானைப் பிளந்தது. ஹான்ஹி எப்படியும் நம்மைப் பின் தொடர்வார் என யோசித்து, அவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது, விரைவில் முன்ஜென்மம் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சீக்கிரமாக மூலிகைகளை உண்ணத் தொடங்கினான். கையில் காகிதங்களுடன், கண்கள் உருட்டி மயங்கி விழுந்தான். உலகம் இருண்டது…

* * * *
ஹான்ஹி இறுதியாக மூலிகை வேர் இருக்கும் இடத்தை அடைந்து எஞ்சியிருந்த வேர்களைச் சேகரித்தார், அவரருகே வினித்தின் உடையை மாற்றியவாறு இருந்த ஒரு கழுதையைக் கண்டார். ஏதோ அரண்மனைக் கழுதை போல, கழுதை இனத்திற்கே உரிய கம்பீரத்துடன் இருந்த அக்கழுதை ஏதோ பல்வேறு மொழியில் எழுதப்பட்ட காகிதங்களை மென்று கொண்டிருந்தது.!


வல்லமை இதழிலும் படிக்கலாம்.

0 மறுமொழிகள்: