Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Saturday, September 5, 2015

அன்று காலை உணவு முடிந்தவுடன் காலை மடித்தமர்ந்து கொண்டு பல்குத்திக் கொண்டிருந்த சக சிறைவாசிகளிடம் தனது சோகக்கதையை சுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தோசைமணி. அதுவொரு தேர்தல் காலம் தெருவிற்குத் தெரு பிரச்சாரங்கள் சூடு பிடிக்க, தனது துண்டு பீடியில் சூடுவைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார் தலைவர் சுருளி. சுருளி வாழ்க! சுருளி வாழ்க! என்று கத்திக் கொண்டு தலைவருடன் வேட்புமணு தாக்கல் செய்யப்போனவர்களில் ஒருவர் தான் தோசைமணி. வேட்புமணுவைத் தாக்கல் செய்தவுடன் பிரச்சாரப் பொறுப்பை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்தார் சுருளி. ஆனால் பணமுமளித்தால்தான் பொறுப்பை ஏற்போம் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் போஸ்டர் ஒட்டும் பொறுப்பை நான் எடுத்துக்கிறேன் தலைவரே என்று தானாகமுன்வந்து வாய்ப்பை வாங்கினார் தோசைமணி. முன்பணம் கொடுக்க சில்லறையில்லையே என்று தலைவர் சொன்னபோது "முன்பணமா முக்கியம் நீங்கள் உங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்" என்று ஜால்ரா போட்டு வேலையைப் பிடித்தார். காரணம் இருமாதங்களாக தனது பிரஸ் ஹவுஸ் என்று சொல்லிக்கொள்ளும் அச்சகத்தில் வேலையில்லாததால் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் தோசைமணி.


போஸ்டர் தயாரிக்கும் முன்னரே இடம் பிடிக்க வேண்டுமென்ற தொழில்தர்மத்தின்படி தனது படையுடன் தெருத்தெருவாகச் சென்று அனைத்துச் சுவர்களிலும் இடம் போடப் புறப்பிட்டார். நோட்டீஸ் ஒட்டாதே என்று எழுதிய சுவர்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. "ரிசர்வ்ட் பார்" என்று எழுதிக் கொண்டிருந்த போது ஒரு சுவர் இடிந்தும் விழுந்தது என்பது தனிக்கதை அடுத்தநாள் செய்தித்தாளைப்பார்க்கவும். "குட்டிச்சுவராகப் போ" என்று பலரைத் திட்டியபோது கூடக் கவலைப்படாதவர் இன்று ஊரில் ஒரு குட்டிச் சுவரும் கிடைக்காமல் அல்லல்பட்டார். கடைசியாகக் கிடைத்த ஒரு சுவரில் "ரிசர்வ் பார் .." என்று எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் மீது ஆளுங்கட்சி கோஷ்டிகள் ஒரு பெரிய போஸ்டரை ஒட்டிவிட்டது. பெரிய இடம், வம்பு வேண்டாம் என்று தியாகச் செம்மலாக விட்டுக் கொடுத்து நடந்தார்கள். ஒரு இட்லிக் கடை ஓரத்தில் ஒரு சுவர் தென்பட்டது, அங்குச் சென்றுபார்த்தால் அது மூத்திரச் சந்து. எதிரே ஒரு காலியான சுவர் கண்ணில் பட்டது. ஆனால் வேலி போட்டிருந்தது. உங்கள் பேஸ்டில் உப்பிருக்கா என்பது போல வீட்டுச் சுவரில் எழுதிக்கவா என்று வீடுவீடாகக் கேட்டும் பார்த்தார். படித்துமுடித்தவுடன் வெளிநாட்டில் வேலை என்று சொல்லும் கல்லூரி போல எங்கள் தலைவர் வெற்றிப்பெற்றால் வெளிநாட்டில் வேலைவாங்கித்தருவார் என்று சொல்லியும் பார்த்தார் சுவர் கிடைக்கவில்லை.

"அப்ப ஒரு இடமும் கிடைக்காதா? கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாதா?" என்று பக்கத்திலிருந்தவர் கொளுத்திப்போட, மீண்டும் இடம் பிடிக்க எழுத்த தோசைமணியிடம் "இடம்தானே வேண்டும் சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டிலிருந்து 10 கிலோமீட்டரில் தேசியநெடுஞ்சாலை அருகே ஒரு இடம் இருக்கு வேணுமா" என்றார் ஒரு திடீர் ஆசாமி. பின்னாலே வந்தவர்கள் அந்த ஆசாமியைப் பிடித்திழுத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள். அம்மருத்துவமனைச் சுவரைப் பார்த்தது மகிழ்ச்சியில் பிரஸை எடுக்கப்போனார் தோசைமணி. "இது மனநலமருத்துவமனை இங்கு "ரிசர்வ்ட்" என்று எழுதினால் வேறு பொருள் வேறு இடம் பார்ப்போம்" என்று பக்குவப்படுத்தினார் ஒரு கூட்டாளி. சுவரே தெரியாத அளவிற்குக்கூட்டமாக ஒரு இடமிருந்தது, "ரிசர்வ்ட்" என்று எழுதப் போகிறேன் என்றவுடன் கூட்டமே சேர்ந்து அடிக்கவந்தது. இது எதிர்க்கட்சிக் கோஷ்டியோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, யாராக இருந்தாலும் ரிசர்வேசன் கிடையாது கடைதிறக்கும் முன்னே க்யூவில் நிற்கிறோம் என்றார் ஒரு டாஸ்மாக் பக்தர்.

இடம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த நேரம் திருடர்கள் என நினைத்துத் தெருநாய்கள் கூட குலைத்தன. குலைக்கும் நாய் மீதே போஸ்டரை ஒட்டிவிடுவோம் என்று நாய் மீது ரிசர்வ்ட் பார் சுருளி என்று எழுதத் துணிந்தார். ஆனால் அந்த நாயோ நாலுகால் பாய்ச்சலில் தப்பிவிட்டது. இருக்கவே இருக்கிறது கழுதைகள் என்று மூன்று கழுதைகளைப் பிடித்து எழுதத் தொடங்கும் போது அக்கழுதை விட்ட உதையில் கொண்டுவந்த சாயங்கள் சிந்திவிட்டன. ஒரு பசுமாடும் கன்றுக்குட்டியும் கிடைத்தன பிரச்சினை இல்லாத ஜீவன்கள் இதுதான் என்று முடிவு செய்து கன்றுகுட்டி முதுகில் எஞ்சிய சாயத்தைக் கொண்டு "ரிசர்வ்ட் பார் சுருளி" என்று வெற்றிகரமாக எழுதினார். கூடுதல் சாயம் எடுத்துவர ஆளனுப்பினார் இதற்கிடையில் கன்றுக்குட்டியை நக்கியே அம்மாடு சுத்தப்படுத்திவிட்டது. சுதாரித்துக் கொண்ட சூடாமணியான தோசைமணி போஸ்டருக்கு இடம்பிடிக்க மாற்றுவழிகளைத் தேட ஆயுத்தமானார். பேருந்துகளில் ஒட்டலாம் என்று ஒருவர் யோசனை சொன்னார். ஆனால் பேருந்திற்குள்ளே ஒட்டுவதா வெளியே ஒட்டுவதா என்று குழம்பிக் கடைசியில் படியில் ஒட்டிவோம் என்று ஒருமனதாக முடிவுசெய்தனர்.

தனது படைகளுடன் பழக்கத்தோசத்தில் ஓடும் பேருந்தின் படியில் ஏறி எழுதிக்கொண்டிருந்த போது நடத்துநர் வாய்தவறி விசில் அடிக்க, ஓட்டுநர் கால்தவறி பிரேக் பிடிக்க, தோசைமணி தனது குழுவினருடன் கைதவறி ரோட்டில் விழுந்துவிட்டார். விழுந்தவுடன் சமாளித்துக் கொண்டு ரோட்டில் எழுதத்தொடங்கினார். ரிசர்வ்ட் பார்.. என்று எழுதிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த தண்ணீர் லாரி நிலைதடுமாறி தண்ணீரைக் கொட்டி, தோசைமணியின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. விடாமுயற்சியின் மறுபெயரான தோசைமணியில் அடுத்த முயற்சி ரயில் என்று முடிவானது, ஆனால் ரயிலில் ஏற்கனவே யாரோ ரிசர்வ்ட் என்று எழுதியிருப்பதை அறிந்து அரசியல் நாகரீகத்தை மனத்தில் வைத்து ரயிலில் எழுதவேண்டாம் என்று தீர்மானித்தார். இந்நாட்டில் போஸ்டர் ஒட்டக்கூட இடமில்லை என்று நொந்துகொண்டு சீனப் பெருஞ்சுவர் அருகே அடுத்த ஜென்மத்தில் பிறக்கவேண்டும் என்று கம்யூனிசம் பேசினார். தனது எழுத்துச் சுதந்திரத்தை யார் பறிப்பார்கள் என்று வெறிகொண்டு வீதிக்கு வந்தார். அகலமான இடமொன்று தெரிந்தவுடன் உடனே வேகமாக எழுதிவிட்டார் தோசைமணி. ஒரு போஸ்டரையாவது ஒட்டுவதற்கு இடம்கிடைத்த மகிழ்ச்சியில் உற்றுப்பார்த்தால் அது ஒரு போலீஸ்காரரின் முதுகு. கூடவந்த சகாக்கள் எல்லாம் ஜகா வாங்க, பணத்தை எண்ணவேண்டிய கையால் கம்பியை எண்ணநேர்ந்தது என்று தனது சிறைக்கைதிகளிடன் ஃபிளாஸ் பேக்கை முடித்தார் தோசைமணி.

திண்ணை இதழுக்காக எழுதிய பதிவு

2 மறுமொழிகள்:

இராய செல்லப்பா said...

நகைச்'சுவையாக' எழுத வருகிறது உங்களுக்கு. நன்கு வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று தமிழில் நல்ல நக்ஜிச்சுவை எழுதும் இளைஞர்கள் மிகவும் குறைவு. - இராய செல்லப்பா

இராய செல்லப்பா said...

'நகைச்சுவை' என்று வர வேண்டியது, "நக்ஜிச்சுவை" என்று வந்துவிட்டது. திருத்தி வாசிக்கவும். நன்றி. - இராய செல்லப்பா