Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Friday, November 27, 2009

பால் வெள்ளை நிறமாகவும், மெல்லிய திரவம் போலவும் இருக்கும். குறிப்பாக, பால் பவுடர் போன்ற சுவையுடன் இருக்கும். இவை பொதுவாக பிஸ்கெட் விளம்பரங்களிலும், ஹெல்த் டிரிங்ஸ் விளம்பரங்களிலும், மிட்டாய் விளம்பரங்களிலும் காணப்படும்.


எப்போதாவது ஒருமுறை சமையலறையில் பொங்கிப்போன பானையில் காணக் கிடைக்கலாம். பால் எந்தவொரு நாட்டுக்கும் தனிப்பட்ட உணவில்லை. மேலும், இது எந்த நூற்றாண்டிலிருந்துப் பயன்படுத்தப்பட்டதாக தகவலுமில்லை. பெரும்பாலும் தேநீர் கடைகளில் நிறச்சாயமாகவும், காபி கடைகளில் வாசனைக்காகவும் பயன்படுகிறது.


பால் மூலப்பொருளாக இருந்தாலும் தயிர், மோர், நெய் ஆகியவற்றுக்கே இது ஆதாரப்பொருளாக கருதப்படுகிறது.பால் ஒரு சோதனை உணவுப்பொருள் (சோதனைக் கூட எலி போல) காலையில் அடுப்பை பற்ற வைத்தவுடன் காய்ச்சுவது பால்தான். அதைப் போல புதியதாக வீடு கட்டியவரும் முதலில் பாலை காய்ச்சி விட்டுதான் மற்றதை சமைப்பார்.

பாலுக்கு மருத்துவ குணம் அதிகம். அதனை பிரதிபலிக்கவே மருத்துவமனைகள் கூட வெள்ளையாகயிருக்கிறது. பாலைக் காய்ச்சி குடித்தாலும், காய்ச்சாமல் குடித்தாலும் டம்ளரில் தான் குடிக்க வேண்டும். யாரும் தட்டில் குடிக்கமாட்டார்கள். அதனால் தான் தட்டுக்கும் பாலுக்கும் எப்போதும் சண்டை வந்துகொண்டிருக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு பூனைகள் தட்டைத் தள்ளிவிட்டு பாலை குடித்துவிடுகிறது. சர்க்கரைப் பொங்கலில் பாலை ஊற்றி தயாரித்தாலும், வெண்பொங்கலில் யாரும் பாலை ஊற்றுவதில்லை. அதனால்தான் நாம் வெண்பொங்கலுடன் சாம்பார் ஊற்றி சாப்பிடுகிறோமே தவிர, சர்க்கரைப் பொங்கலில் அல்ல.

பால் இந்தியில் தூத், மலையாளத்தில் பால், கன்னடத்தில் ஹலு, ஜெர்மனில் மில்ச், சிங்களத்தில் கிரி, ஆங்கிலத்தில் மில்க் என பலவேறு மொழிகளில் வெவ்வேறாக அழைக்கப்பட்டாலும், அந்த பால் தரும் பசுக்கள் "ம்மா" என தமிழில் கதறுவது நம் காதில் தேன் வந்துப் பாய்வதுப் போலவுள்ளது. எந்த நிறத்தில் பசுக்கள் இருந்தாலும், அதுதரும் பால் மட்டும் வெள்ளையாயிருப்பது உலகறிந்த உண்மையே. வெவ்வேறு பசுக்கள் தரும் பாலில் மனிதனின் கைவரிசையால் செய்யப்படும் பால்பதார்த்தங்களில் மட்டும் ஒரே சுவையாகாயிருப்பது எதார்த்தமே. செவ்வாயில் தண்ணியிருக்கா என்று ஆராயும் நாசாகூட பாலில் தண்ணி கலந்திருக்கா என்று ஆராயத் தவறியது பாலுக்கு கிடைத்த பரிசு. காய்ச்சிய பாலில் ஆடைவிழுவது இயற்கை என்றால், கரந்த பாலில் நுரையிருப்பதும் இயற்கைதான் என்கிறார்கள் பால்காரர்கள்.

மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் திரு பார்த்திபதாசன் தனது நூலில் ஒரு கள்ளிப்பாலை இவ்வாறு வர்ணிக்கிறார்..
"ஒரு கள்ளி,
பாலில்
கள்ளிப்பாலை
கலந்து கொடுக்கிறாள்!".
இந்நூலுக்கு உரை எழுதிய திரு பாண்டியதாசன் தனது மற்றொரு நூலில்...
"பால் குடிக்கும் புலி வளர்த்தேன்
பால் குடிக்கும் புலி வளர்த்தேன்
ஆனால் இது பூனையென்கிறார்கள்
புலியைப் பார்த்து சூடுபோட்ட பூனையோ?" என்கிறார்.
இவற்றின் மூலம் பழங்காலத்திலிருந்தே பால் பற்றிய குறிப்புக்கள் விரவிக்கிடக்கிறதுயென அறிய முடிகிறது.


பாலைப் பற்றிய குறிப்புக்கள் பல நமது நவீன கால இலக்கியத்தில் கிடைக்கிறது. பஞ்ச் பாஸ்கர் எழுதிய 'பொந்துக்குள் எலி'யென்ற நூலில்...
"நெல்லு விளைஞ்சா சோறு
பாலு தேரஞ்சா மோர்" என அதன் பெருமையைப் பறைசாற்றுகிறார்.
மேலும்,
"பால்ல கலந்த, தண்ணி கூட பொங்கும்
பால்ல விழுந்தா, பல்லி கூட துள்ளும்" என்கிறார்.
மற்றொரு கவிஞர் வைடூரியமுத்து தனது 'தகரக் கவிதைகள்' என்ற கவிதை நூலில்,
"பால் கொட்டிப் போச்சுனா ஈக்கு ஆகாரம்
பால் கெட்டுப் போச்சுனா வயித்துக்கு சேதாரம்" என உலகுக்கு புதிய கருத்துக்களை வீசுகிறார்.
இந்தப் பால் கவிஞர்களுக்கும் பாடலாரியருக்கும் பாடுபொருளாகப் பயன்படுகிறதென்றால் மாற்றில்லை அதுபோல மக்களையும் அடைந்துள்ளது. உதாரணத்துக்கு, "பாலும் பழமும் கைகளில்...", "பாலூட்டி வளர்த்தக் கிளி..." போன்ற திரையிசை பாடல்கள் அதை மெய்ப்பிக்கிறது.


1945-ல் இரண்டாம் உலக மாகயுத்தத்தின் போதுதான் பால் பற்றாக் குறையை போக்க தண்ணீர் கலக்கும் முறை அறிமுகமானது. ஆனால், இன்றோ தண்ணியே பற்றாக் குறையாகவுள்ளதால் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலப்படத்தை அதிகப்படுத்தலாம். காபியில் கலந்த பால் கூட காபியென அழைக்கப்படும் அதுபோல பாலில் கலந்த காபியை பால் என்றுதான் அழைக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும். பாலுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க ஒவ்வொரு பசுவுக்கும் எல்.ஐ.சி. பாலிசி எடுக்கலாம் (வரிச்சலுகை பெற), இது வெளிநாடு வாழ் இந்திய பசுவுக்கும் பொருந்தும். வெவ்வேறு நாட்டுப்பசுக்கள் அந்நாட்டின் சட்ட திட்டத்தை பின்பற்றவும். பாலில் தண்ணி கலப்பதற்காகவாவது மழை நீரை சேமிக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள்.

இறுதியாக, 'தனிமனிதனொருவனுக்கு பால் இல்லையெனில் இந்த ஜகத்துக்கே பால்லூற்றுவோம்' எனக்கூறி முடிக்கிறேன்!

இதை வெளிட்ட இளமை விகடனுக்கு நன்றிகள் http://youthful.vikatan.com/youth/Nyouth/neechalkaran20112009.asp

10 மறுமொழிகள்:

Anonymous said...

also available in some attractive containers
:-)

அகல்விளக்கு said...

அடங்கொன்னியா...

எப்படிப்பா இப்படியெல்லாம்...

இதுவரைக்கும் பாலுக்கு இப்படி ஒரு ஆய்வறிக்கை பாத்ததில்லப்பா...

கலக்குங்கோ.....

அது தண்ணில பாலானாலும், பால்ல தண்ணினாலும் பரவாயில்ல

கலக்குங்கோ.....

அள்ளி விட்டான் said...

நல்லா காய்ச்சி இருக்கீங்க பங்காளி....

ஸ்வர்ணரேக்கா said...

நல்லாதானே போய்ட்டு இருந்துச்சு...

என்னாச்சு பாஸ்... :)

ப்ரியமுடன் வசந்த் said...

// பாலில் தண்ணி கலப்பதற்காகவாவது மழை நீரை சேமிக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள்.//

அவ்வ்வ்..எவ்வளவு நல்லெண்ணம்...

நல்லதொரு இடுகை நண்பா...

நீங்கள் இந்த இடுகைக்காக பாலில் நீச்சலடித்திருக்கிறீர்கள்..

யூத்ஃபுல் விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்

ரோஸ்விக் said...

பால் வளத் தலைவர் வாழ்க...வாழ்க...அங்கங்கே சில குசும்பு வார்த்தைகள்....சரிதான் நடக்கட்டும். :-)

நீச்சல்காரன் said...

அகல்விளக்கு,
அள்ளி விட்டான்,
பிரியமுடன் வசந்த்,
ரோஸ்விக்,
அனானி,
தங்கள் கருத்துக்கள் என்னை உற்சாக படுத்துவதாகவுள்ளது
நன்றிகள்

உடனடியாக என்னால் வரமுடியாததால் ஏற்பட்ட காலதாமததிற்கு வருந்துகிறேன்.

நீச்சல்காரன் said...

ஸ்வர்ணரேக்கா சகோதரி,
கொஞ்சம் நையாண்டியாக எழுதலாம்யென எண்ணி எழுதியது. தங்கள் கருத்துக்கு நன்றி

Chitra said...

பாலை தயிராக்கி, தயிரை மோராக்கி ............... கடஞ்சிட்டீங்க போங்க! பாலுக்குள் இத்தனை விஷயங்கள்/கவிதைகள்/நக்கல்கள் கண்டு எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நீச்சல்காரன் said...

chitra,
உங்கள் வரவு எனக்கு புது ஊக்கத்தை கொடுத்துள்ளது நன்றிகள்