Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, June 24, 2013


மொய் வாங்கலாம் என்றால், ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தை நடத்துகிறோம். அதனால் தான் பொண்ணும் மாப்பிள்ளையும் வரும் முன்னரே மொய் நோட்டு மண்டபம் வந்துவிடுகிறது. நடக்கும் அதிகமான விசேஷங்கள் எல்லாம் மெய்யை நம்பி கடன் வாங்கி நடத்துவதாகவே உள்ளன. ஆனால் மொய் அதிகரிக்கும் நுட்பத்தைப் பலரும் அறிந்திலர். அதற்காக மண்டபம் போட்டு யோசித்த யோசனைகள் இதோ

  லெவல் 1
 • எ.டி.எம். எந்திரங்களுக்கு அருகிலுள்ள மண்டபங்களைத் தேர்ந்தெடுக்கவும்
 • சாப்பாட்டுப் பந்தி சிறப்பாகயிருக்க வேண்டும். சுவையோ, அளவோ, தரமோ குறையாதளவிற்குக் கவனிக்க வேண்டும்
 • போட்டோ எடுக்க என்று மேடைக்கு அழைக்கும் பெரியவர்களிடம்(பாக்கெட் இருப்பவர்கள்) விபூதி வழங்கக்கோரி விழா நாயகரைக் காலில் விழச்சொல்லவும்.
 • மொய்ப்பானையைச் சுற்றிய மஞ்சள் துணியை இறுக்கக் கட்டி ஒருவழிப்பாதையாக்க வேண்டும். சில்லறை கேட்பவர்களிடன் எடுக்கமுடியவில்லை என்று எடுத்துரைக்க வேண்டும்.
 • விழா நிச்சயமாக பொதுவிடுமுறை நாள் அன்று நடக்கவேண்டும்.
 • சாம்பள நாட்களுக்கு அருகில் விசேஷங்களை நடத்தலாம். அதனால் மொய் வைப்போரின் பை ஆரோக்கியமாக இருக்கும்
 • யாருக்கும் தெரியாமல் சிறிய அமௌன்ட் வைத்துக் கொடுக்க மொய் கவர் சிறந்த வழி என்பதால் , மொய் கவர் வாங்குவதை அறவே தவிர்க்கலாம். மொய் எழுதச் சொல்லி நாசுக்காக ஆலோசனை தரலாம்
 • கிரிடிட்/டெபிட் கார்டுகள் மூலம் மொய் வாங்கும் தொழிற்நுட்பத்தைப் புகுத்த வேண்டும். இணைய வழி பணமாற்றத்தையும் ஊக்குவிக்கலாம்
 • வெளிநாட்டினர் வருகிறார்கள் என்றால், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு அதிகமாக இருக்கும் போது திருமணத்தை நடத்தலாம்.
 • முடிந்த அளவு பத்திரிகையில் அதிகமான உறவினர்கள் பெயர்களைப் போடவும், பெயர் போட்டதற்காகவே மொய் போடுவார்கள்
 • என்ன மச்சான் ஆளவே காணாம், அடுத்தக் கல்யாணம் உங்களுக்குத்தான்; என்ன மதினி நல்லா இருக்கீங்களா?; பெரியப்பா ஏன் கல்யாணத்துக்கு முதல் நாளே வரல?;மாமா புதுசா வீடு கட்டபோறேங்களாமே, என்று மொய் வைப்பவருடன் மொய் எழுதுபவர் பாசத்தைப் பொழிய வேண்டும்
 • குறைவாக மொய் எழுதியவரைவிட அதிகமாக மொய் எழுதியவரின் பெயரையும் பணத்தையும் பெரிதாக எழுதவும். நோட்டை பார்ப்பவர்களுக்கு எல்லாம் ஐநூறு ஐநூறாகத் கண்ணில் படவேண்டும் கவுரவக் குறைச்சலாக நினைத்து அதிகம் வைப்பார்கள்
 • ரூபாய் நூறுக்கு மேல் செய்பவருக்கு ஒரு டம்பர் இலவசம் என்று அறிக்கை வைத்து, வழங்கலாம்.
 • கடைசியாக, யாருக்கெல்லாம் மொய் செய்தீர்களோ அவர்களுக்கெல்லாம் மறக்காமல் பத்திரிக்கை வைக்கவும்
 • அதுக்கும் மேல லாபம் வேண்டுமா!
  லெவல் 2
 • டெல்லி உயர் நீதிமன்றத்தில் உள்ளதுபோல கருப்பு நிற சிசிடிவிகள்(CCTV) பொறுத்த வேண்டும்.பணம் கொடுக்காமல் பெயர் சொல்லிவிட்டு எஸ்' ஆகமுடியாது 
 • மொய்வைப்பிடத்திற்கு அருகாமையில் யுனஸ்கோ அறிவித்துள்ள 70db அளவுகளுக்குள் தான் பாட்டு பொட்டிகளின் ஒலி அளவுகள் இருக்க வேண்டும்.
 • மொய் எழுதும் இடத்தில் நடக்கும் அடிதடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை தகுந்த முன் ஏற்பாடுகள் செய்ய கேட்டுக் கொள்ளலாம்.
 • சில்லறைத் தட்டுபாட்டைத் தடுக்க, ரிசர்வ் வங்கி உடனடியாக திருமண மண்டபங்களுக்கு அருகே இந்திய நாணயக் கிடங்கின் விநியோக நிலையத்தை அமைக்க வேண்டி விண்ணப்பம் அளிக்கலாம். 
 • உற்றார் உறவினர் வீட்டு விசேசங்களுக்குச் சென்று வர அரசு சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டி முதல்வருக்கு மடல் வரையலாம்.
 • வெளிநாடுவாழ் உறவினர்கள் மொய் எளிதில் செய்ய அந்நியச் செலாவணிக் கட்டணங்களை நீக்க நிதி அமைச்சகத்திற்குக் கோரிக்கைவைக்கலாம்.
 • 50000 ரூபாய்க்கு மேல் வரும் மொய்ப் பணத்திற்கு வரிவிதிக்கும், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 56(2)யை உடனடியாகத் திரும்பப் பெற பொது நலன் வழக்குத் தொடுக்கலாம்.
 • காகித மரக் கொள்முதலுக்கு முறையான தணிக்கை அமைத்து தரமான மொய் நோட்டுகள் தயாரிக்க இந்திய தரநிர்ணய ஆணையத்திற்கும், இந்திய வர்த்தகத்துறை அமைச்சகத்திற்கும் ஆலோசனை அனுப்பலாம்.
 • மொய் வைப்பதற்காக ஸ்டேட் பாங்க் வட்டியில்லாக் கடன் அளிக்க அவ்வங்கியின் கவர்னரைக் கேட்டுக் கொள்ளலாம்.
 • மொய் கணக்கைப் பரம்பரிக்க பிரத்தியேக மென்பொருள் ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வழங்க அந்நிறுவன வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.
 • சில்லறை மொய் பரிவர்த்தனையில் நேரடி அந்நிய முதலீட்டை ஆதரிக்க வேண்டி தகுந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளலாம்.
 • பணம் எண்ணும் எந்திரங்களுக்கு மாநில அரசு மானியம் தந்து திருமணங்கள் சிறக்க மாநில வர்த்தக அமைச்சகத்தை வற்புறுத்தலாம் 
 • இந்தியாவிலிருந்து வெற்றிலை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கொழுந்து வெற்றிலை கையிருப்பை மத்திய வேளாண் அமைச்சகம் உறுதி செய்ய கேட்கலாம்.
 • மொய் நோட்டில் எழுதும்விதமாக ஒவ்வொரு ஊரின் பெயர்களை அவ்வூரின் உள்ளாட்சித் தலைவரும், உறுப்பினர்களும் சுருக்கி எளிமை படுத்த முன்வர ஆலோசனை அனுப்பலாம்.
 • கல்யாணம்,காதுகுத்து போன்ற சுப நிகழ்வுகளுக்கு மொய் எழுதும் மேசைகளை அப்பகுதி அரசு பள்ளிகள் இரவலாக வழங்க மாநில அரசுகள் அணையிட/அல்லது அப்பள்ளி காவலர் அனுமதிக்க வேண்டி பேரணி நடத்தலாம்.

இதுக்கும் மேலையும் லாபம் வேணுமா? அப்ப நீங்க எலக்ஷசனில் ஜெயித்து மந்திரியாகனுமே!

3 மறுமொழிகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

யம்மாடி...! எத்தனை எத்தனை...!!!

அப்படியே பத்திரிக்கை கொடுக்கும் போது, அதில் ஆளுக்கேத்த மாதிரி மொய்யை குறித்து விட்டோம் என்றால் விசேசம் நன்றாக நடக்கும்... ஹிஹி...

ப.கந்தசாமி said...

பத்திரிக்கை கொடுக்கும்போதே நாம் அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு எவ்வளவு மொய் வைத்தோம் என்று சூசகமாகத் தெரிவித்துவிடவேண்டும்.

நீங்கள் மொய் வைக்காமலிருந்தாலும் சும்மா ஒரு ரீல் விடலாம். இது அந்த ஆயிரம் பொய்களுக்குள் அடங்கும்.

SNR.தேவதாஸ் said...

இதையெல்லாம் எனக்கு ஒரு 35 வருடங்களுக்கு முன்னால் சொல்லக்கூடாதா?ஐயோ போச்சே.வாழ்க வளமுடன்கொச்சின் தேவதாஸ்