Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Saturday, December 14, 2013



"ரொம்ப நன்றி. சார் யு ஆர் சோ கைண்ட்புல்" என்று ஒலித்தவாறே வாசற்கதவு திறந்தது. தொலைப்பேசியை அணைத்துவிட்டு, "இவனெல்லாம் ஒரு மேனேஜரு இவனுக்கெல்லாம் பயபப்படவேண்டியதாப்போச்சே" என்று கவரி மானாக மனதுக்குள் முனங்கியவாறே அறைக்குள் நுழைந்தான் வினித். வினித் அகராதியில் அட்வைஸ்கள் என்றுமே இலவசம், ஆனால் இயல்புக்கு மாறாக இன்றோ காலையிலிருந்து யார்யாரிடமோ இவன் அட்வைஸ் வாங்கி புளித்துப் போன அவனுக்குப் பொங்கலாகக் கிடைத்தான் அறைத்தோழன் ரஞ்சித். ரஞ்சித், அப்போதுதான் வேலைதேடி நகருக்கு வந்திருக்கும் கிராமத்து இளைஞன். அதனாலோ என்னவோ ஆலோசனை கேட்க ஆரம்பித்தாலே அட்வைஸ் மழை பொழிந்துவிடுவான் நமது வினித். நீச்சல் அடிப்பது எப்படி என்கிற காணொளியைக் கணினியில் பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித். "உனக்கு நீச்சல் அடிக்கத் தெரியாதா?" என்று சகஜமாக அலமாரியைத் திறந்தவாறே கேட்டான் வினித். "எங்கவூர்ல கண்மாயே இல்ல அதான் பழகமுடியல" என்றான். "சுவிமிங் பூல்கூட இல்லையா?" என்று கேள்வியை அடிக்கினான் வினித். "அங்கபோய் நீச்சல் பழகி என்ன போட்டிக்கா போகப்போறேன்" என்று முடித்துக் கொண்டான் பதிலை. "நீச்சல்ங்கிறது ரொம்ப முக்கியமானது, நீச்சல் தெரியாத ஆளை இன்னைக்குத் தான் பார்க்கிறேன். தவறி ஆத்தில வந்தா என்ன செய்வே?" என்று தனது அலமாரிக்கு வெளியே தலையை விட்டு விசாரிக்கத் தொடங்கினான் வினித். "அப்ப பார்த்துக்கலாம் இனிமே ஏதாவது சான்ஸ் கிடச்சா பழக வேண்டியதுதான் அதுக்கென்ன" என்று சாராசரி பதிலளித்தான். "எங்கவூர்ல அப்படித்தான் ஒரு நாள் ..." என்று சொந்தமாக ஒரு திரைக்கதையை அவுத்துவிட்டான் வினித் இடையே இடையே புரியுதா! நான் சொல்றது சரிதானே என்று குறுக்குகே கேள்விவேறு கேட்டு நீச்சல் வாத்தியார் போல சொல்லிமுடித்தான். "நீ ஒருவாட்டி கத்துகிட்டாப் போதும் ஆயுசுக்கும் மறக்காது. நானெல்லாம் சின்ன வயசுல கிணத்துல கயிறு கட்டி நீச்சல் அடிச்சிருக்கேன். தெரியுமா?" என்று பூரித்துக் கொண்டான் வினித். "ம்ம்" என்று தலையை அசைத்துவைத்தான் ரஞ்சித். அந்தக் காணொளியைப் பார்த்து "அவனுக்குக் காலை அசைக்கவே தெரியல." என்று படத்தில் வந்தவனையும் விமர்சித்து தனது கிணற்று நீச்சலை ஒப்பிட்டுக் கொண்டான். "அதனால சீக்கிரம் நீச்சலைக் கத்துக்கோ.. நான் ரூம்ல இருந்தாப் பரவாயில்லை, நான் எங்காவது போனபோது சுனாமி வந்தா என்ன செய்வே" என்று சிரிக்காமல் சிந்தாந்தத்தை முடித்தான் வினித். "ஃபிரியா இருந்தா நான்கூட உன் கூட வாரேன்" என்று ரஞ்சித் சொல்லிமளவிற்கு வந்துவிட்டான். "சுவிமிங் பூல்னா தண்ணீ சுத்தமாயிருக்காது, கடல்னா உப்பு உடம்ப அரிக்கும் அதனால் ஊருக்கு வா கிணறு இருக்கு என்று" அழைப்புவிடுத்தான் நீச்சல் சக்கரவர்த்தி வினித். அப்போது ஓடிக்கொண்டிருந்த கானொளியில் ஒரு மாஸ்டர் "நன்னீரான கிணற்று நீச்சல் வேறு, உப்பு நீரான கடலில் போட வேண்டிய நீச்சல் வேறு இது தெரியாமல் பலர் ஆபத்தில் சிக்குகிறார்கள் ..." என்று ஒலித்துக் கொண்டிருந்தபோது அலமாரியின் கதவுகளுக்குள் வினித் ஒழிந்து கொண்டான்.

3 மறுமொழிகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அல்டாப்பு வினித்திற்கு தேவை தான்...!

காமக்கிழத்தன் said...

சுவையான சிறுகதை.

பத்தி பிரித்து எழுதலாமே.

VALLALAR MANAVAN said...

super