நான்கு சாலைகள்
சங்கமிக்கும் வழியின்
மையத்தில் விழியற்ற
சிலையாய் நான்
வெந்த குடலுக்குச்
சொந்தமான பசி படிந்த
வயிற்றுக்கு எட்டாத
மிஞ்சிப்போன சோற்றை
எச்சிலிட்ட காக்கைகள்
என்மீது எச்சமிட்டுப்போகும்
சாலையில் மீளவழியற்று
மீந்துபோன மழைநீர்
மனிதனுக்கில்லாமல்
நாய்கள் நக்கியபின்
வாகனங்களால் என்
மீது வீசப்படும்
வடிகட்டிய வார்த்தைகளற்று
வாயாறக் கொட்டித்தீர்க்கும்
வாகனப்புகை
இரச்சலுடன் இருமலையும்
எனக்குத் தந்துசெல்லும்
கெட்டிக்கார வயது
இளரத்தங்கள் உல்லாசம்
கொட்டிப்போனப் பின்னே
என் முன்னே
விட்டுப்போன பீங்கான்
குடுவைகள் சிறுவர்களின்
பீடி செலவுக்கு உதவும்
ஆண்டுக்கொரு முறை
அரசியல் சதுரங்கத்தின்
பணவாடை மாலைகள்
என்னைப் பணயமாக்கி
சின்னச்சின்னக் கலக
குமிழிகளைச் சீண்டிவிடும்
அனுமானிக்க முடியாத
தொல்லைகளால்
அனுதாபமாக நிற்கிறேன்
மன்னிக்க மனமிருந்தும்
கேட்பதற்கு ஆளில்லையே
2 மறுமொழிகள்:
வணக்கம்
கவிதையின் வரிகள் மனதை கவர்ந்துள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வரிகள் உண்மை...
Post a Comment