Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Thursday, November 27, 2014

Info Post
புளி சோறும் பருப்புத் துவையலும் கட்டிக் கொண்டு ரயில் பயணங்களில் செல்வது என்பது பலருக்குப் பிடித்த பால்யகால அனுபவம். அப்போது அப்பா வாங்கித் தந்த மிளகாய் இல்லாத ஆமை வடையை ரயிலைவிட அதிகமாக ரசித்திருப்போம். டூருக்கு கிளம்பினாலேயே அம்மாவைப் பொறுத்தமட்டில் எல்லா உணவுப் பண்டங்களையும், தண்ணீர் புட்டிகளையும் பைகளுக்குள் திணித்தாலேயே பாதி வெற்றி அடைந்த மாதிரிதான். அதில் தின்பண்டப் பையைப் பாதுகாக்கும் பொறுப்பை நாமே குத்தகைக்கு எடுத்திருப்போம். இப்படி எல்லை இல்லாத ஆனந்தத்தைக் கொடுப்பது சுற்றுலா. கையைக் கடிக்கும் பெட்ரோல் விலை (இதை எழுதிக் கொண்டிருக்கும் மணிவரை) ஒருபுறம், கழுத்தைப் பிடிக்கும் விடுதிகளின் வாடகை ஒருபுறம், சுங்கச் சாவடிகளின் இருபத்து நான்குமணிநேர வாங்கும் சேவை ஒருபுறம், பயணிகளைப் படிவரை நிரப்பி வழிவழிய ஓடும் ரயில் சேவை ஒருபுறம் எனப் பல பிரயத்தனங்களுக்கு ஈடுகொடுத்து சென்று வரும் பயணங்களுக்குத் திட்டமிடல் என்பது மிகவும் அவசியம்.
அவ்வகையில் நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம், இணையத்தில் அலசிப் பார்க்கலாம், ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் கூடி விவாதிக்க சிறந்த வழிகாட்டி ஒரு புத்தகமாக இருக்கும். தேக்கடிக்கு செல்லும் போது பார்த்திருக்கும் ஒரு பறவையின் பெயர் தெரியாமல் வந்திருப்போம், அல்லது குற்றாலத்தில் குளித்தவுடன் சூடான பஜ்ஜியைத் தவற விட்டிருப்போம், அல்லது அறிவியலைப் பற்றி குழந்தைகளிடம் பேசிவந்திருப்போம் ஆனால் கோளரங்கிற்குச் சென்றிருக்க மாட்டோம் இப்படி தவறவிட்ட பல இனிய விஷயங்களைச் சுட்டிக் காட்டி மாநிலத்தில் உள்ள சிறந்த தலங்களை அறியத்தருகின்றது இந்த வழிகாட்டி புத்தகம். ஏராளமான சரணாலயங்கள், மலை வாசஸ்தலங்கள், அணைக்கட்டுகள், நீர்வீழ்ச்சிகள், சதுப்பு நிலங்கள் என குளிர்ச்சியான இடங்களைக் கண்முன்னே கொண்டுவருன்றது.
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி என்ற பெயரில் 100 இடங்களின் தூரம், தங்குமிடம், பயணப்பாதை என்று குறிப்பிட்டு ஒரு சுற்றுலா கையேடாகவுள்ளது இப்புத்தகம். “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது” என்ற பாடல் படமாக்கப்பட்ட இடம் இதுதான் என்பது போன்ற பல உபரித் தகவலோடும், முக்கிய கோவில்களும் அதன் பிரசித்தி பெற்ற அம்சங்களையும் குறிப்பிடுவதாலும், அருகருகே இருக்கும் இடங்களைப் பற்றிக் குறிப்பிடுவதாலும் பயணவழிகாட்டி என்பதோடு பயண ஊக்கப்படுத்தியாகவும் இப்புத்தகம் இருக்கிறது. விசா இல்லாமல் ஏராளமான வெளிநாட்டினர் வந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துச் செல்லும் இடங்கள் மற்றும் பயமில்லாமல் பார்வையாளர்களின் தின்பண்டங்களை முரட்டுத் தனமாக எடுத்துச்செல்லும் மான்கள் கொண்ட பூங்காக்கள் நம்மை அவ்விடத்திற்குக் கற்பனையில் அழைத்துச் செல்கின்றது.
திருமயம், புளியஞ்சோலை , திருமலை, கொடிவேரி அணை, திற்பரப்பு அருவி, சிதறால் மலை, முக்கொம்பு, குருசடை தீவுகள் போன்ற அறியப்படாத இடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கோவில், தேவாலயம், மசூதி இம்மூன்றும் கொண்ட கோட்டை; சில்வர் பீச், சில்வர் பால்ஸ் போன்ற துணுக்குத் தகவல்கள் பரவலாக உள்ளன. பரம்பிக்குளம் வனம், வேடந்தாங்கல் போன்ற இடங்கள் பற்றி ஆழமாகவும் அதிகமாவும் சொல்லும் இப்புத்தகம், இராமேஸ்வரம், மதுரை போன்ற இடங்களில் அதிகமாக விவரித்திருக்கலாம். கோதண்டராமர் கோவில், ராமர் பாதம் லஷ்மணத் தீர்த்தம், திருப்பரங்குன்றம், காந்தி அருங்காட்சியகம் போன்றவை விடுபட்டுவிட்டன.
என்ன சாப்பிடலாம், அதுவும் அப்படி சாப்பிடலாம் என்பதுவரை கூறுகிறது; எந்த நிறச் சட்டை போட்டுச் செல்வது நல்லது என்றெல்லாம் கூறி ரசிக்கவைக்கிறது. வழிகாட்டியின் முக்கிய அம்சமான வரைபடம் இப்புத்தகத்தில் உள்ளது ஆனால் இடங்கள் குறிக்கப்படாமல் மாவட்ட வரைபடத்தை மட்டும் கொண்டுள்ளது. ஒரே மாதிரியான வர்ணனைகளைத் தவிர்த்து ஒரு பட்டியலில் தூரம், உகந்த காலம், போன்றவை இட்டிருந்தால் படிக்கையில் ஏற்படும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். இருந்தும் பயணக் கையேடு என்பதால் வைத்து வைத்துதானே படிப்போம் என்று விட்டுவிடலாம். படித்த பிறகு நீங்கள் சுற்றுலா செல்ல தீர்மானித்தாலோ, அல்லது சுற்றுலா செல்லும் பொழுது இப்புத்தகக் குறிப்புகள் நினைவில் வந்தாலோ அதுவே இப்புத்தகத்தின் வெற்றி.
ஆசிரியரின் பாணியில் சொல்வதென்றால்
எதற்குப் படிக்க வேண்டும்?
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலைப்பகுதிகளையும், கடல்பகுதிகளையும், புராதானச் சின்னங்களையும் பூங்காக்களையும் அறிந்து கொள்ள இதைப் படிக்க வேண்டும்.
படிப்பதற்குச் சிறந்த இடங்கள் எவை?
ரயில், பேருந்து பயணங்களில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து படிப்பது சுவாரசியமானது. சுற்றுலா செல்லும் முன் படிப்பது பயணத்திற்கு உதவிகரமானது.
இதர பயன்கள் என்ன?
சுற்றுலா கையேடு என்பதால் பரிசாகக் கொடுக்கவும், நினைவுகளைக் கோதிவிடவும் சிறந்த புத்தகம்.
எங்கே வாங்கலாம்?
கிழக்கு பதிப்பகம் https://www.nhm.in/shop/978-81-8493-552-3.html

0 மறுமொழிகள்: